மத்திய அரசு ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது முதல் சிம் கார்ட் தொடங்கி மின் அட்டை, வங்கிக் கணக்கு வரை பெரும்பாலனவற்றில் ஆதாரை எண்ணை இணைப்பது கட்டாயமாகிவிட்டது.
அந்த வகையில் தற்போது பணப்பரிமாற்றம் செய்யும் ‘Google Pay’ செயலி, மத்திய அரசின் ‘NPCI’ யுடன் இணைந்து UPI-ஐ வெரிஃபை செய்வதற்காக ‘Google Pay’ யிலும் ஆதாரை எண்ணை இணைக்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டு அடிப்படையிலான UPI கணக்குத் தொடங்கும் வசதியும் ‘Google Pay’-ல் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் தங்களது ஆதார் எண்ணையும், போன் நம்பரையும் வங்கிக் கணக்கில் இணைப்பதை உறுதிசெய்யவும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தப் புதிய நடைமுறை பெரும் உதவியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
Canara Bank, Kerala Gramin Bank, Karur Vysya Bank, Tamilnad Mercantile Bank, Central Bank Of India உள்ளிட்ட பல வங்கி கணக்குகளில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ICICI Bank, State Bank of India உள்ளிட்ட சில வங்கிக் கணக்குகளுக்கு இந்த நடைமுறை இன்னும் வரவில்லை. கூடிய விரைவில் அனைத்து வங்கிகளும் இதில் சேர்க்கப்படும் என்றும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கூகுள் பே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதார் கார்டு பயன்படுத்தி UPI கணக்குத் தொடங்கும் இந்த வழிமுறை மூலம் இனி டெபிட் கார்டு விவரங்கள் கொடுக்காமலே UPI PIN கிரியேட் செய்ய முடியும். இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் UPI ID-க்களை உருவாக்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.