சென்னை: வாரிசு வெளியான அதேவேகத்தில் லியோ படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள விஜய், லியோ படத்தை பெரிதும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துள்ளார்.
லலித் குமார் தயாரிப்பில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக இது உருவாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபாஸ்டியனும் லியோவில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய்யுடன் இணையும் பிரேமம் பட நாயகி:விஜய் தற்போது லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார். காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், கெளதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ஷெட்யூல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை தொடர்ந்து விசாகப்பட்டிணத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் லியோ படத்தில் மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் அறிமுகமானவர் மடோனா. முதல் படத்தில் நல்ல அறிமுகம் கொடுத்ததால் தமிழ், தெலுங்கிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது லியோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே த்ரிஷா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் விஜய்யுடன் நடித்து வரும் நிலையில், தற்போது மடோனா செபாஸ்டியனுமா என ரசிகர்கள் மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
லோகேஷின் படங்களில் நாயகிக்கு பெரிதாக ஸ்பேஸ் இருக்காது என ரசிகர்களே விமர்சித்துள்ளனர். எந்த நடிகையாக இருந்தாலும் அவரை போட்டுத் தள்ளிவிடுவது தான் லோகேஷின் வழக்கம். இன்னொரு பக்கம் ஏற்கனவே லியோ படத்தில் ஒரு லாரி லோடு அளவிற்கு நடிகர்கள் நடித்து வருகின்றனர். விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், நரேன், டான்சர் வசந்தி, ஜார்ஜ் மரியான், மாயா கிருஷ்ணன் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இவர்களெல்லாம் வரிசையாக வந்து வணக்கம் சொல்லிவிட்டுப் போனாலே 2 மணி நேரத்துக்கு படம் ஓடும். ஆனால், லோகேஷ் அதைபற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மினி பஸ்ஸில் ஆள் ஏற்றுவதை போல கடைசி நாள் படப்பிடிப்பு வரையிலும் ஒவ்வொரு நடிகராக செலக்ட் செய்து வருகிறார். இப்படியே போனால் டைட்டில் கார்டு போடுவதற்கே ஒரு ஷோ தேவைப்படுமோ என தியேட்டர் உரிமையாளர்களே கவலையில் உள்ளார்களாம்.
இந்நிலையில் தான் லியோ படத்தில் மடோனா செபாஸ்டியனும் இணைவதாக செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் இன்னும் யாரெல்லாம் நடிக்கிறார்களோ என ரசிகர்களே குழப்பத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் ஃபஹத் பாசிலும் லியோவில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி லியோவில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.