சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் பாடல் ஷூட்டிங்கில் மடோனா செபாஸ்டியன் கலந்துகொண்டு ஆடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விக்ரம் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
லியோ: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரில் ஷுட்டிங் நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது
என்னென்ன கேரக்டர்கள்?: இதற்கிடையே லியோ படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியானது. அதன்படி, பாட்ஷா படம் போல் ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் பேக்கரி வைத்து வாழ்வார் எனவும், அவருக்கு சகோதரராக அர்ஜுன் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. மேலும் சஞ்சய் தத் விஜய்க்கு தந்தையாக நடிக்கிறார். அவரும் படத்தில் கேங்ஸ்டர்தான் எனவும் கூறப்பட்டது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பாடல் ஷூட்டிங்: இந்தச் சூழலில் லியோ படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் சமீபத்தில் தொடங்கியது. இந்தப் பாடலுக்காகத்தான் இந்தியா முழுவதுமிலிருந்து 2000 டான்ஸ்ர்களை வரவழைக்க லோகேஷ் திட்டமிட்டதாகவும், ஆனால் அந்தத் திட்டம் பலிக்காததால் நடன அமைப்பாளர்கள் நடத்தும் நடன பள்ளிகளிலிருந்து சிறந்தவர்களை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்பட்டது.
விஜய் சேதுபதி ஹீரோயின்: இந்நிலையில் இந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். கடந்த சில நாள்களாக நடந்துவந்த ஷூட்டிங்கில் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன் விஜய் மற்றும் 2000 டான்ஸர்களுடன் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய அப்டேட் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் 68: இன்னும் சில நாள்களில் லியோ ஷூட்டிங் முடிவடையவிருப்பதாகவும் ஜூன் மாதத்தின் இறுதியில் படத்துக்கான டப்பிங்கை விஜய் கொடுப்பார் என்றும் தெரிகிறது. லியோ ஷூட்டிங்கை முடித்துவிட்டு சின்ன ரெஸ்ட் எடுக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே அதிகரித்திருக்கிறது.