சென்னை: Prabhu Deva (பிரபுதேவா) நடன அமைப்பாளரும், இயக்குநருமான பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறாள். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் புகழப்படும் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களும், பிரபலங்களும் அடிமை. அவரது நடனத்தை பார்த்து பலரும் இன்றுவரை பிரமிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குநராக இருந்த சுந்தரம் மாஸ்டரின் இரண்டாவது மகன் பிரபுதேவா.
பிரபுதேவாவின் அட்டகாசமான கோரியோகிராஃபி: பிரபுதேவா நடன அமைப்பாளராக பணியாற்றும்போது அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர். ஏன் நடனத்தில் கிண்டலடிக்கப்பட்ட விஜயகாந்த்கூட பிரபுதேவா நடன அமைப்பில் அட்டகாசமாக ஆடியிருப்பார். அதேபோல் அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரபுதேவா: நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்தச் சூழலில் வில்லு படத்தை இயக்கியபோது நடிகை நயன்தாராவை காதலித்தார். திருமணம்வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களது காதல் பாதியிலேயே முடிந்தது.
பிரபுதேவா திருமணம்: இதற்கிடையே தனது முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயனுடனான பிரேக்கப்புக்கு பிறகு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவரும் திருப்பதிக்கு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் தனது முதல் மனைவியின் மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டுவருகிறார் பிரபுதேவா.
அப்பாவான பிரபுதேவா: இந்நிலையில் பிரபுதேவாவுக்கும், ஹிமானி சிங்கிற்கும் திருமணம் நடந்து மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தச் சூழலில் ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இதன் மூலம் பிரபுதேவா மீண்டும் தந்தையாகியிருக்கிறார். இதனையடுத்து பிரபுதேவாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.