சென்னை: எஸ்ஜே சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.
இந்தப் படம் ராதாமோகன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பொம்மை படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல யூடியூப் சேனலில் எஸ்ஜே சூர்யா பேட்டிக் கொடுத்திருந்தார்.
அப்போது அவருடன் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவும் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான சம்பவங்களை மனம் திறந்துள்ளார்.
எஸ்ஜே சூர்யா கொடுத்த அன்பளிப்பு:அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து குஷி, நியூ, அ.. ஆ.., இசை போன்ற படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா தற்போது வெரைட்டியான நடிகராக மிரட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழி படங்கள் மட்டும் இல்லாமல், வெப் சீரிஸிலும் மாஸ் காட்டுகிறார். இந்நிலையில், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு பிரபல யூடியூப் சேனலுக்கு எஸ்ஜே சூர்யா பேட்டிக் கொடுத்துள்ளார். அப்போது எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவும் எஸ்ஜே சூர்யாவுடன் பங்கேற்றிருந்தார். இருவருமே இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய மாரிமுத்து, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
ஆனால், இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், எஸ்ஜே சூர்யாவுடன் பேட்டியில் பங்கேற்றிருந்த மாரிமுத்து ஆசை படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து மனம் திறந்தார். அதாவது ஆசை படத்தில் அஜித்தும் சுவலட்சுமியும் நடித்த ஒரு காட்சியின் பின்னணியில் ஆங்கிலோ இந்தியன் பாட்டி ஒருவரை நிற்க வைத்திருந்தார்களாம்.
மீண்டும் ஒருமுறை அதுமாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டும் என மாரிமுத்துவிடம் வசந்த் கூறியுள்ளார். அதனால், அந்த பாட்டியை தேடிப் பிடித்து கூட்டி வரச் சொல்லியிருந்தாராம். ஆனால், மாரிமுத்து அந்த பாட்டி இறந்துவிட்டதாக பொய்சொல்லிவிட்டு வீட்டில் படுத்து தூங்கிவிட்டாராம். மாரிமுத்து சொன்னதை உண்மை என நம்பிய வசந்த் மறுநாள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது அந்த பாட்டி எதார்த்தமாக வந்து இயக்குநர் வசந்துக்கு வணக்கம் கூறியுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியான மாரிமுத்து, வசந்திடம் போய் உண்மையை சொல்லிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது என எஸ்ஜே சூர்யா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து பேசிய மாரிமுத்து, வாலி படத்தில் சம்பளமே வாங்காமல் இயக்கிக் கொடுத்தார் எஸ்ஜே சூர்யா. அந்தப் படம் ஹிட்டானதால் தான் அடுத்து விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கினார்.
மேலும், குஷி படத்தை இயக்குவதற்காக எஸ்ஜே சூர்யாவுக்கு சில லட்சங்கள் அட்வான்ஸாக கிடைத்ததாம். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் இருந்த 7 உதவி இயக்குநர்களுக்கும் பைக் வாங்கிக் கொடுத்துள்ளார் எஸ்ஜே சூர்யா. தனக்காக எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அட்வான்ஸ் பணத்தை உதவி இயக்குநர்களுக்காக செலவு செய்ய பெரிய மனது வேண்டும் என மாரிமுத்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.