மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்
அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வுசெய்து போட்டிக்கு அனுப்புகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ம் தேதி டெல்லியில் தொடங்கியது. ஆனால், இதில் பங்குபெற வேண்டிய மாணவர்களை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தேர்வுசெய்யவில்லை என குற்றச்சாட்டு கிளம்பியது. மாணவர்களின் வேலை வாய்ப்பு வரை தொடர்புடைய ஒரு விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து முறையான தகவல் பரிமாற்றம் செய்யவில்லை என்றும், பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவின்பேரில் மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.