சென்னை: Vijay (விஜய்) விஜய்க்கு பின்னால் பாஜக இருப்பதாக சந்தேகம் எழுகிறது என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருக்கிறது. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரும்.
விஜய்யின் மூவ்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஹாட் டாபிக் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் விஜய்யோ அதுகுறித்து எந்த ரியாக்ஷனும் செய்யாமல் மௌனம் காத்துவருகிறார்.அதேசமயம் அவரது நடவடிக்கைகள் விஜய்யின் அரசியல் மூவ்வை உறுதிப்படுத்துவதாக பலர் கூறுகின்றனர். எப்போதும் சென்னையில் நடத்தப்படும் தனது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இம்முறை தென் மாவட்டங்களில் நடத்துவதற்கு காரணமும் அரசியல் ஆசைதான் என்கின்றனர் அவர்கள்.
மாணவர்களுடன் சந்திப்பு: அதேபோல் 234 தொகுதிகளிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதும், சமீபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்த சொன்னதும் அரசியலுக்கான பாதைதான் என்றும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. மேலும், தனது மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு செயலையும் அரசியல் நோக்கியே நகர்த்துகிறார் விஜய் என்றும் பெரும்பாலானோரால் எண்ணப்படுகிறது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அரசியலுக்கு ஒருவர் வந்தால் அவரை பெரிய செலவுகளில் இழுத்துவிடும். விஜய் அரசியலுக்குள் வந்தால் இந்த செலவுகளை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது குறித்து தெரியவில்லை. விஜய்க்கு கைக்கொடுப்பதற்காக யாராவது பின்னணியில் இருக்கிறார்களா என்று எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. யாரோ விஜய்யை பின்னால் இருந்து இயக்குகிறார்கள், அது ஒருவரா? இல்லை ஒரு கட்சியா? என்று கேள்வி எழுகிறது.
பின்னணியில் பாஜக?: வெளிப்படையாக சொல்லப்போனால் விஜய்க்கு பின்னால் பாஜக இருக்கிறதா என்ற சந்தேகம்கூட இருக்கிறது.தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட கட்சிகளின் வலிமையை குறைக்க வேண்டும் என்றால் மூன்றாவதாக ஒரு சக்தியை வளர்த்துவிட வேண்டும். அது வளர்ந்த பிறகு அதனுடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக பாஜகவுக்கு இருக்கும்” என்றார். அந்தணனின் இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
லியோ ஆடியோ லான்ச்: முன்னதாக விழா ஒன்றில் கலந்துகொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் வைக்க விஜய் விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.