போர் தொழில் (தமிழ்)
பெண்களைத் தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் ஒருவனைத் தேடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்களே இந்த ‘போர் தொழில்’. அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் காவல் அதிகாரிகளாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டக்கர் (தமிழ்)
கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, அபிமன்யு சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. பணத்தால் மட்டுமே இந்த உலகில் மரியாதையுடன் வாழ முடியும் என்று நம்பும் இளைஞர், தன் வாழ்வில் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் ஜீன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பெல் (தமிழ்)
சிங்கவனம் என்ற காட்டில் வாழும் மக்கள் திடீரென்று விசித்திரமான நோயால் இறந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், கதாநாயகன் பெல்லும் அவருடைய நண்பன் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்கானிக் பார்ம் ஒன்றை நடத்தி வரும் குரு சோமசுந்தரம் நோய்யைக் கண்டுபிடித்து இயற்கை மூலிகைகளை வைத்து அம்மக்களைக் காப்பாற்றினாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. வெங்கட் புவன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், துர்கா, நிதிஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜீன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Vimanam (தெலுங்கு)
மாற்றுத்திறனாளியாக சக்கர நாற்காலியிலேயே இருக்கும் தந்தை, ‘விமானத்தில் பயணிக்க வேண்டும்’ என்ற தன் மகனின் கனவை நனவாக்கப் பாடுபடுவதுதான் இதன் கதைக்களம். சிவ பிரசாத் யானாலா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் ஜூன் 9ம் தேதி தெலுங்கு/தமிழ் இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘Vimanam’.
Transformers: Rise of the Beasts (ஆங்கிலம்)
இப்படம் 2007-லிருந்து ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்துவரும் டிரான்ஸ் ஃபார்மர்ஸ் லைவ்-ஆக்ஷன் திரைப்பட வரிசையின் ஏழாவது பாகமாகும். ‘Bumblebee’ திரைப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக உருவாகியிருக்கும் இதை ஸ்டீவன் கேப்பிள் ஜூனியர் இயக்கியிருக்கிறார். அந்தோனி ராமோஸ், டொமினிக் ஃபிஷ்பேக், லூனா லாரன் வெலஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். ஆங்கில மொழியில் உருவான இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்…
மாலை நேர மல்லிப்பூ (தமிழ்) – Aha
சமூகத்தால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் ஒரு பெண், தான் வாழ்வதற்காகப் போராடுவதாகவும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கொடூரமான சமூகத்திடமிருந்து தனது மகனைப் பாதுக்காக்கப் போராடுவதுமாக இதன் கதைக்களம் அமைந்துள்ளது. சஞ்சய் நாராயணன் இயக்கத்தில் அஸ்வின், ஜோஷ்வந்த் கிறிஸ், வினித்ரா மாதவன் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஜூன் 9ம் தேதி ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Gunehgaar (இந்தி) – Zee5
ஆகர்ஷ் குரானா இயக்கத்தில் சுமீத் வியாஸ், கஜ்ராஜ் ராவ், ஸ்வேதா பாசு பிரசாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gunehgaar’. சஸ்பென்ஸ், திரில்லர் ஜானர் படமான இது ஜூன் 9ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Koi Baat Chale (இந்தி) – Zee5
இயக்குநர்கள் மயங்க் பஹ்வா, சீமா பஹ்வா ஆகியோர் இயக்கத்தில் கோபால் தத், வினீத் குமார், மனோஜ் பஹ்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Koi Baat Chale’. காமெடி, டிராமா திரைப்படமான இது ஜூன் 9ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Kusum Manohar Lele (இந்தி)- Zee5
இத்திரைப்படம் ‘Kusum Manohar Lele’ என்ற மராத்தி நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது 1986 இல் புனேவில் நடந்த ஓர் உண்மைக் கதை. ஏற்கெனவே திருமணமான மனோகர், முதல் மனைவிடம் (குசும்) குழந்தை பெற முடியாமல் சுஜாதா என்ற பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு அவரது முதல் மனைவியும் உடந்தையாக இருக்கிறார்.
மனோகர் – சுஜாதா இருவருக்கும் குழந்தை பிறக்க, குழந்தையை எடுத்துக் கொண்டு மனோகரும், அவரது முதல் மனைவியும் சுஜாதாவை ஏமாற்றி விடுகின்றனர். பெரும் ஏமாற்றத்திற்குள்ளான சுஜாதாவிற்கு மனோகரின் சூழ்ச்சி தெரியவர அதன்பின் அவளின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் இதன் கதை. அசோக் சாமெல் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 9ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bloody Daddy (இந்தி) – Jio Cinema
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ஷாஹித் கபூர், ஆமி ஏலா, அங்கூர் பாட்டியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி திரைப்படம் ‘Bloody Daddy’. ஆக்ஷன், ட்ராமா, திரில்லர் கலந்த திரைப்படமான இது ஜூன் 9ம் தேதி ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. NCB அதிகாரியாக இருக்கும் ஷாஹித் கபூர், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட தன் மகனைக் காப்பாற்ற மாஃபியாக்களையும், காவல்துறையையும் எதிர்த்துப் போராடுவதுதான் இப்படத்தின் கதைக்களம். இது ‘தூங்காவனம்’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான ‘Sleepless Night’-ன் இந்தி ரீமேக்.
Perfect Addiction (ஆங்கிலம்) – Amazon Prime Video
குத்துச்சண்டை பயிற்சியாளரான ஒரு பெண், தான் காதலித்த குத்துச்சண்டை சாம்பியனால் ஏமாற்றப்படுகிறார். காதல் சூழ்ச்சியால் தன்னை ஏமாற்றியவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க தனது புதிய காதலனுக்குக் குத்துச் சண்டை பயிற்சி அளித்து காதலிலும், களத்திலும் வெற்றி காண்கிறார். காஸ்டில் லாண்டன் இயக்கத்தில் மனு பென்னட், ரியான் பவுன், ராஸ் பட்லர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 9ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Flamin’ Hot (ஆங்கிலம்) – Disney+ Hotstar
சிறுவயதில் பேமஸாக விற்கப்பட்ட சீட்டோஸ் ‘Flamin’ Hot Cheetos’ தின்பண்டத்தை உருவாக்கிய பிரபல அமெரிக்க பிசினஸ்மேனான ரிச்சர்ட் மொன்டனெஸியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இது. ஈவா லாங்கோரியா இயக்கத்தில் ஜெஸ்ஸி கார்சியா, அன்னி கோன்சலஸ், எமிலியோ ரிவேரா நடித்துள்ள இத்திரைப்படம் ஜூன் 9ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Sarvam ShakthiMayam (இந்தி) – Zee5
பிரியாமணி, ஆஷ்லேஷா தாக்கூர், சமீர் சோனி உள்ளிட்டோர் நடிக்க பி.வி.எஸ். ரவி இயக்கிவரும் இந்தி மொழி வெப்சீரீஸ் ‘Sarvam ShakthiMayam’. ஒரு நாத்திக எழுத்தாளர் பிரச்னைகளும், கஷ்டங்களும் நிறைந்த தன் குடும்பத்துடன் 18 மகா சக்தி பீடங்களை தரிசிக்க புனித யாத்திரை மேற்கொள்வதுதான் இந்த வெப்சீரீஸின் கதைக்களம். இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் ஜூன் 9ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகிறது.
Saint X (ஆங்கிலம்) – Disney+ Hotstar
லீலா கெர்ஸ்டீன் இயக்கத்தில் அலிசியா டெப்னம்-கேரி, ஜோஷ் போன்சி, வெஸ்ட் டுச்சோவ்னி நடிப்பில் உருவாகியுள்ள மர்மம் நிறைந்த திரில்லர் வெப்சீரீஸ் ‘Saint X’. இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகிறது. ஒரு இளம் பெண்ணின் மர்மமான மரணம் எப்படி அதிர்ச்சிகரமான அலைகளை உருவாக்குகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.
Never Have I Ever Season 4 (ஆங்கிலம்) – Netflix
2020ம் ஆண்டு வெளியான ‘Never Have I Ever’ வெப்சீரீஸின் நான்காவது சீசன்தான் இது. டீனேஜ் மாணவர்கள் சந்திக்கும் காதல், சண்டை, கனவுகள், அவர்கள் குடும்பத்தின் பின்னணி என அவர்களின் வாழ்க்கையை மையாமாக வைத்து நகரும் கதை இது. இந்த வெப்சீரீஸ் கடந்த ஜூன் 8ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Crowded Room (ஆங்கிலம்) – Apple TV+
அகிவா கோல்ட்ஸ்மேன், டாட் கிராஃப் ஆகியோர் உருவாக்கத்தில் டாம் ஹாலண்ட், அமெண்டா சேஃப்ரீட், வில் சேஸ், லியர் ராஸ் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம், ட்ராமா வெப்சீரீஸ் ‘The Crowded Room’. 1979 கோடையில் மன்ஹாட்டனில், ஒரு இளைஞன் ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான். ஆனால், உண்மையான குற்றவாளி அடுத்த மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் முன் அவனைத் தடுத்து, தான் ஒரு நிரபராதி என நிரூபிக்கப் போராடுகிறான். இந்த வெப்சீரீஸ் கடந்த ஜூன் 8ம் தேதி முதல் ‘Apple TV+’ ஓடிடி தளத்தில் வாரம் ஒரு எபிசோடு என்பதாக வெளியாகி வருகிறது.
Barracuda Queens (Swedish) – Netflix
Camilla Ahlgren இயக்கத்தில் Izabella Scorupco, Johannes Kuhnke, Alva Bratt உள்ளிட்டோர் நடிப்பில் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஸ்வீடிஸ் மொழி வெப்சீரீஸ் ‘Barracuda Queens’. இளம் பெண்கள் எதிர்பார்ப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம்.
Bloodhounds (Korean) – Netflix
ஜூ-ஹ்வான் கிம் இயக்கத்தில் வூ டோ-ஹ்வான், சி வோன் சோய், பார்க் சுங்-வூங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கொரியன் வெப்சீரீஸ் ‘Bloodhounds’. பணம் கடத்தலை மையப்படுத்திய ஆக்ஷன், திரில்லர் கலந்த இந்த வெப்சீரீஸ் ஜூன் 9ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Playing CardKiller (Spanish) – Netflix
2003-ம் ஆண்டில் ஸ்பெயினைப் அச்சுறுத்திய ஒரு மோசமான சீரியல் கொலையாளியைப் பற்றிய ஆவணப்படம் இது. மர்மமான அந்தக் கொலையாளி, தான் கொலை செய்த இடத்திலெல்லாம் ரம்மி கார்டுகளைக் க்ளுவாக விட்டுச்சென்றுள்ளான். இந்த கொலையாளியைப் பற்றிய ஆவணப்படம்தான் இது.
தியெட்டர் டு ஓடிடி:
குடிமகான் (தமிழ்) – Amazon Prime Video
விஜய் சிவன், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணா நடிப்பில் பிரகாஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காமெடி டிராமா திரைப்படம் ‘குடிமகான்’. குடி தொடர்பான பிரச்னைகளை காமெடியாகப் பேசும் இந்தப் படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Gumraah (இந்தி) – Netflix
வர்தன் கேட்கர் இயக்கத்தில் மிருணால் தாக்கூர், ஆதித்யா ராய் கபூர், ரோனித் ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி திரைப்படம் ‘Gumraah’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Raghu (கன்னடம்) – Amazon Prime video
எம்.ஆனந்த் ராஜ் இயக்கத்தில் விஜய் ராகவேந்திரா நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கன்னடத் திரைப்படம் ‘Raaghu’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, தற்போது ‘Amazon Prime video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
2018 (மலையாளம்) – SonyLIV
2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை பாதிப்புகளையும், கேரள பெருவெள்ளத்தையும் மையமாக வைத்து JUDE ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம் ‘2018’. இப்படத்தில் குஞ்சாகோ போபன், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இப்படம் தற்போது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Avatar: The Way of Water (English) – Disney+ Hotstar
ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ 3டி தொழில்நுட்பத்துடன் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Empire of Light (ஆங்கிலம்) – Disney+ Hotstar
சாம் மென்டிஸ் இயக்கத்தில் ஒலிவியா கோல்மன், மைக்கேல் வார்டு, கொலின் ஃபிர்த் 2022-ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ‘Empire of Light’. ‘Bipolar disorder’ என்ற நோயால் மன அழுத்துடன் வாழும் ஹிலாரி, பிரச்னைகளிலிருந்து தப்பிக்க தன் காதலியுடன் ஊரைவிட்டே செல்கிறார். அதன்பின் அவர் சரியானாரா, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாரா? இசை, சினிமா, சமூகம் இம்மூன்றும் அவர் மனதை எப்படி மாற்றியது என்பதுதான் இதன் கதைகளம். 1980 காலகட்டத்தில் நடக்கும் நெகிழ்ச்சியானக் காதல் கதையான இது, தற்போது ஜூன் 9ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Custody (தமிழ்/ தெலுங்கு) – Amazon Prime Video
முதலமைச்சரையும் ஒட்டு மொத்த மாநிலக் காவல்துறையையும் எதிர்த்து, ஒரு தாதாவை ஒரு சாதாரண கான்ஸ்டபிள் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் ‘கஸ்டடி’. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா அக்கினேனி, அரவிந்த் சாமி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்களில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
#MenToo (தெலுங்கு) – Aha
சமூகத்தின் பல்வேறு குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஆண்கள், போலியான பெண்ணியம் பேசும் பெண்களால் பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். காமெடி, டிராமா திரைப்படமான இது தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Creed 3 (ஆங்கிலம்) – Amazon Prime Video
மைக்கேல் பி. ஜோர்டான் இயக்கத்தில் அவருடனே கீனன் கூக்லர், சாக் பேலின், ரியான் கூக்லர் உள்ளிட்டோர் நடிக்க ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘Greed 3’. தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் நல்ல வசதியாக வாழும் அடோனிஸ் நீண்ட காலத்திற்குப் பிறகு முன்னாள் குத்துச்சண்டை வீரரான தனது குழந்தை பருவ நண்பரைச் சந்திக்கிறார். அதன்பின் இருவருக்கும் நடக்கும் குத்துச் சண்டை களம்தான் படத்தின் கதைக்களம்.
65 (ஆங்கிலம்) – Netflix
ஸ்காட் பெக் மற்றும் பிரையன் வூட்ஸ் இயக்கியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் ’65’. ஆடம் டிரைவர், அரியானா கிரீன்ப்ளாட், சோலி கோல்மன் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். ஒரு கிரகத்தில் ஏற்பட்ட பேரழிவு விபத்துக்குப் பிறகு, பைலட் மில்ஸ், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பூமியில் சிக்கித் தவிப்பதை விரைவாகக் கண்டுபிடித்து அதிலிருந்து மீளுவதுதான் இதன் கதைக்களம். சாகசம், மாயாஜாலங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.