உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவும் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 444 ரன்களை சேஸ் செய்து கொண்டிருந்த சமயத்தில் அணியின் ஓப்பனர் கில்லுக்கு வழங்கப்பட்ட அவுட் முடிவு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிதான் தங்களின் இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தது. 270 ரன்களை எடுத்த நிலையில் அந்த அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணிக்கு டார்கெட் 444. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச டார்கெட்டே 418தான். அப்படியிருக்கையில் இமாலய சேஸிங்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. பெரிய டார்கெட் என்பதால் முதலிலிருந்தே அட்டாக் செய்து ஆஸியின் பந்துவீச்சு படையின் மீது அழுத்தத்தைப் போடும் எண்ணத்தோடு ரோஹித்தும் சுப்மன் கில்லும் ஆடினார்கள். 7 ஓவர்களிலேயே 41 ரன்களை எடுத்திருந்தனர். ஏறக்குறைய ரன்ரேட் 6 ஆக இருந்தது.
அச்சமயத்தில்தான் அந்தச் சர்ச்சையான நிகழ்வு நடந்திருந்தது. 8வது ஓவரை ஸ்காட் போலண்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே கில் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் இன்னிங்ஸிலும் கில் போலண்ட்டின் பந்தில்தான் கில் அவுட் ஆகியிருந்தார். போலண்ட் வீசிய இந்த முதல் பந்திலும் எட்ஜ் ஆனவர் ஸ்லிப்பில் நின்ற க்ரீனிடம் கேட்ச் ஆனார்.
க்ரீன் இடதுபக்கமாக அபாரமாகப் பாய்ந்து ஒற்றைக் கையில் இந்த கேட்ச்சை பிடித்திருந்தார். ஆனால், க்ரீனின் கையிலிருந்து நழுவி பந்து தரையில் பட்டதோ எனும் சந்தேகம் எழுந்தது.
இதனால் களநடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் மேல் முறையீடுக்கு சென்றனர். ஐ.சி.சி-யின் புதிய விதிமுறைப்படி கள நடுவர்கள் சாஃப்ட் சிக்னல் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டதால் கள நடுவர்கள் இங்கே தங்களின் முடிவைச் சொல்லவே இல்லை. மூன்றாம் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சில நிமிடங்கள் இந்த கேட்ச்சை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்துவிட்டு ‘அவுட்’ என முடிவு வழங்கினார். இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. பந்து தரையில் பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியாதபடிதான் கேமரா கோணங்கள் மற்றும் காட்சிகள் இருந்தன.
சில கோணங்களில் பந்து தரையில் உரசியதை போன்றும் இருந்தது. போதுமான ஆதாரமின்றி சந்தேகம் ஏற்படும் போது சந்தேகத்தின் பலனை பேட்டருக்குத்தான் கொடுக்க வேண்டும்.
ஆனால், இங்கே பௌலருக்குச் சாதகமாக முடிவு வழங்கப்பட்டுவிட்டது என சமூக வலைதளங்கள் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மைதானத்திலுமே கூட பெரிய திரையில் ‘அவுட்’ எனக் காண்பிக்கப்பட்ட போது அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கர்கள் ‘Cheater…Cheater…’ என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. கில்லுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ரோஹித்துமே நடுவரின் முடிவால் ‘Noooo…’ என விரக்தியான குரலில் கத்தியதோடு கள நடுவரிடமும் இந்த முடிவு சார்ந்து விவாதத்தில் ஈடுபட்டார்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டர்கள் பலருமே கூட தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த முடிவை மூன்றாம் நடுவர் கண்ணைக் கட்டிக்கொண்டு வழங்கியிருக்கிறார் என்கிற தொனியில் முன்னாள் இந்திய வீரர் சேவாக் கேலியோடு விமர்சனம் செய்திருக்கிறார்.
கில்லுக்கு வழங்கப்பட்ட முடிவு சரியானதா இல்லையா என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்!