ஸ்ரீவில்லிப்புத்தூரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் ஒருவர், ரூ.4.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தைக்கு கடத்தப்பட்டு விற்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் கண்டறிந்து தடுக்கும் பணியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சந்தையில் கடத்தப்படும் ரேஷன் அரிசி மற்றும் பொருள்கள் தனியார் அரிசி ஆலைகளுக்கு கொண்டுச்செல்லப்பட்டு மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றுவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகளே லஞ்சம் பெற்றுக்கொண்டு இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர் என மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். விருதுநகர் மாவட்டம், அழகாபுரியிலுள்ள சோதனைச்சாவடியின் வழியாக வரும் வாகனங்களில் சோதனை நடத்தியதுடன், சந்தேக நபர்கள் குறித்து விசாரணையும் நடத்தினர். இந்த நிலையில் சந்தேகப்படும் வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து விருதுநகர் நோக்கி வந்த கார் ஒன்றை ரகசியத் தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தடுத்துநிறுத்தி சோதனை நடத்தினர். இதில் வாகனத்தில் வந்தவர் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் முருகச்செல்வம் என்பது தெரியவந்தது, மேலும் அவர் வந்த வாகனத்திலிருந்து கணக்கில் வராத சுமார் 4.35 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் அரிசி ஆலை அதிபர்களிடம் லஞ்சமாகப் பெற்ற பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் முருகச்செல்வத்தை கைதுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.