அரிசி கொம்பன் யானை எங்கிருக்கிறது? கண்காணிப்பு பணிகள் எப்படி? நெல்லை வனத்துறை விளக்கம்!

கேரளா மாநிலத்தை அச்சத்தில் ஆழ்த்திய அரிசி கொம்பன் யானை, தமிழக எல்லைக்குள் நுழைந்த கடந்த சில நாட்களாக பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. இதை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த பழங்குடியின மக்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியது பலரது புருவத்தை உயரச் செய்தது.

நெல்லை வனத்துறை அறிக்கை

தற்போது அரிசி கொம்பன் யானை எங்கிருக்கிறது? அது எவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது? போன்ற தகவல்கள் குறித்து திருநெல்வேலி தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிக்கொம்மன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது.

அரிக்கொம்பன் யானை

அரிக்கொம்பன் யானையானது தற்போது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு, அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். ஜீன் 6ஆம் தேதி முதல் வன உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு, முன்களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் அரிக்கொம்மன் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து வருகிறது.

துரை வைகோ அறிக்கை

வனத்துறை சார்பாக யானைக்கும், பொது மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அரிசி கொம்பன் என எப்படி பெயர் வந்தது?

வலசைப் பாதைகள்

உண்மை குற்றவாளி யார்? எனப் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகளின் வலசைப் பாதைகள் பல்லாண்டு காலமாக பயன்பாட்டில் இருந்தன. ஆனால் நமது சுயநலத்திற்காக அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம்.

மரங்களை உருவாக்கும் யானைகள்

பழக்கப்பட்ட வலசைப் பாதைகள் மறிக்கப்படும் போது தான், புதிய இடத்தை நோக்கி யானைகள் நகர்கின்றன. அதனை உணர்ந்து வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெறாத நடவடிக்கைள் எதுவாக இருந்தாலும் அவை தடுக்கப்பட வேண்டும். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எல்லா உயிரினங்களுக்குமானது தான். இந்த பூமியில் உயிரினங்கள் வாழ ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் உருவாக மரங்கள் தேவை. அந்த மரங்கள் உருவாக யானைகள் கண்டிப்பாக தேவை.

இந்த சுழற்சியை உணர்ந்து உயிரினங்களில் பேருயிரான யானைகளைப் பாதுகாப்பது நம் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். அழுத்தமாக நம் நினைவில் கொள்வோம். பல உயிர்கள் வசிப்பதற்கு ஆதாரமான மாபெரும் காடுகளை உருவாக்கும் யானைகளுள் ஒருவர் தான் அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.