அலங்காநல்லூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்கள் – மக்கள் அச்சம்

மதுரை: அலங்காநல்லூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் மக்கள் அச்சம் அடைந்தனர். எஸ்பி உத்தரவை அடுத்து அக்கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர காட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியிலுள்ள கோவில் பாப்பாகுடி உள்ளிட்ட புறநகர் பகுதியில் ‘குரங்கு குல்லா’ எனும் தொப்பி அணிந்த கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முயற்சிப்பது மக்கள் மத்தியில் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை – அலங்காநல்லூர் செல்லும் பகுதியிலுள்ள சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, அதலை, பொதும்பு பகுதியில் கடந்த சில நாளாகவே ‘குரங்கு குல்லா’அரைகால் டவுசர் அணிந்த கும்பல் ஒன்று இரவு நேரத்தில் உலா வருகின்றது. அப்படி தெருப்பகுதியில் செல்லும் அக்கும்பல் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர். தங்களை யாரும் தடுத்து பிடிக்க முயன்றால் அவர்களை தாக்கும் விதமாக கையில் ஆயுதங்களுடனும் சுற்றுகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள 2 நாளுக்கு முன்பு சத்யா நகரில் இயற்கை காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்த தவமணி என்ற பெண்ணை அக்கும்பல் மிரட்டி, 6 பவுன் நகையை பறித்து தப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கோவில்பாப்பாகுடி பகுதியில் வக்கீல் ஒருவரின் வீட்டு சுவரில் ஏறி குதித்து, கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கிறது. மேலும், அவரது வீட்டிலுள்ள சிசிடிவி கேமராக்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நள்ளிரவில் டவுசர் கொள்ளையர்களின் நடமாட்டம், நாளுக்கு, அதிகரிக்கும் நிலையில், பெண்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொள்ளையடிக்க முடியாத வீடுகளுக்கு அக்கும்பலை சேர்ந்தவர்கள் கற்களை வீசிவிட்டு செல்வதும் நடப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ‘குரங்கு குல்லா’ கும்பலின் அட்டகாசம் குறித்த வீடியோ காட்சிகளும் வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார் அளிக்கின்றனர்.

அலங்காநல்லூர் போலீஸாரிடம் கேட்டபோது, ‘கோவில் பாப்பாகுடி பகுதியில் சிலர் இரவு நேரத்தில் முகமூடி அணிந்து கையில் ஆயுதங்களுடன் சுற்றுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது. இக்கும்பலால் பாதிக்கப்பட்டதாக இதுவரை ஒருவர் புகார் அளித்துள்ளார். இருப்பினும், காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் சிறப்பு ரோந்து செல்ல எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார். போலீஸாரும் தீவிர ரோந்து செல்கின்றனர். வீடியோ பதிவுகளை சேகரித்து அக்கும்பலை பிடிக்க முயற்சித்து வருகிறோம்’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.