திருவனந்தபுரம்: கேரளாவில் ‘பாதுகாப்பான கேரளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரூ.232 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஏஐ கேமராக்கள் கடந்த 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், ஏஐ கேமரா செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 5 முதல் 8-ம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் 3,52,730 சாலை விதிமீறல்கள் பதிவாகி உள்ளன. இதை ஆய்வு செய்த ‘கெல்ட்ரான்’ நிறுவனம், ஒருங்கிணைந்த போக்குவரத்து கண்காணிப்பு முறையின் கீழ் 19,790 வழக்குகளை பதிவேற்றம் செய்துள்ளது. இதில் 10,457 விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்துமாறு மோட்டார் வாகனதுறை மூலம் சலான் வழங்கப் பட்டுள்ளது.
விதிமீறல்களில், காரில் பயணம் செய்த 7,896 பேர் சீட் பெல்ட் அணியவில்லை. 6,153 பேர் ஹெல்மட் அணியவில்லை. இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர்களில் 715 பேர் ஹெல்மட் அணியவில்லை.
கேரளாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 12 சாலை விபத்து மரணங்கள் பதிவாயின. ஆனால், ஏஐ கேமரா பொருத்தப்பட்ட பிறகு தினசரி சாலை விபத்து மரணங்கள் 5 முதல் 8 ஆக குறைந்துள்ளன.
கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் முன் இருக்கைகளில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவது வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அந்தோணி ராஜு தெரிவித்தார்.