ஏரியில் மண் கடத்தியவர்களை விடச்சொன்ன திமுக எம்.எல்.ஏ; வழக்கு பதிவுசெய்த டி.எஸ்.பி! – என்ன நடந்தது?

பட்டுக்கோட்டை அருகே ஏரி ஒன்றில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாகப் புகார் வந்த நிலையில், டி.எஸ்.பி பாலாஜி, மண் எடுத்தவர்களைக் கைதுசெய்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தார். இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாதுரை, மண் எடுத்தவர்களுக்கு ஆதரவாக டி.எஸ்.பி-யிடம் பேசியதுடன், வழக்கு பதிவுசெய்யாமல் விட்டுவிடுமாறு சொன்ன விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

மண் எடுக்கப்பட்ட ஏரி

பட்டுக்கோட்டை, திட்டக்குடி அருகேயுள்ள ஏரியில் அனுமதியின்றி விதியை மீறி சிலர் சவுடு மண் எடுத்து வந்திருக்கின்றனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி பாலாஜிக்குப் புகார் வந்திருக்கிறது. இதையடுத்து அவர் போலீஸ் டீமுடன் திட்டக்குடி ஏரிக்குச் சென்றதுடன் மண் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மண் எடுக்கப் பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரங்கள், டிராக்டரைப் பறிமுதல் செய்தார்.

மண் கடத்தியவர்களுக்கு ஆதரவாக பட்டுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாதுரை, டி.எஸ்.பி-க்கு போன் செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும், கைதுசெய்திருப்பவர்களையும் விடச்சொல்லியிருக்கிறார். அதற்கு டி.எஸ்.பி பாலாஜி, “20 அடி வரை மண் வெட்டி எடுத்திருக்கின்றனர். விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது, வழக்கு பதியவில்லை என்றால் நாங்கள் மாட்டிக்கொள்வோம்” என்றிருக்கிறார்.

பொறுப்பு டி.எஸ்.பி பாலாஜி

உடனே, “தாசில்தார் கீழ்தானே இது வரும், தாசில்தாரிடம் கூறிவிட்டோம். வண்டியை விடுங்கள்” என எம்.எல்.ஏ கூற, அதற்கு டி.எஸ்.பி, “என்னால் விட முடியாது, வழக்கு பதிவுசெய்கிறோம். நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். எம்.எல்.ஏ, டி.எஸ்.பி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ வெளியே கசிந்ததால், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து டி.எஸ்.பி பாலாஜியிடம் பேசினோம். “காலாவதியான உரிமத்தை வைத்துக் கிட்டத்தட்ட 20 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி மண் எடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து ஸ்பாட்டுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற பிறகே சம்பந்தப்பட்ட தாசில்தார் ஏரிக்கு வந்தார். விதியை மீறி சட்டத்துக்குப் புறம்பாக மண் எடுப்பதை தொடர்ச்சியாக செய்து வந்திருக்கின்றனர்.

ஏரி

20 அடி ஆழம் வரை மண் எடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மண் எடுப்பதற்குப் பயன்படுத்திய ஐந்து ஜே.சி.பி இயந்திரங்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். மேலும் மண் கடத்தலில் ஈடுபட்ட மாதரசன், கலையரசன், ஸ்ரீதர், குமார் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இது தொடர்பாகப் பேசிய எம்.எல்.ஏ அண்ணாதுரை, வண்டியையும் அவர்களையும் விடச்சொன்னார். `இல்ல சார் விவகாரம் பெரிதாகிவிட்டது, வழக்கு பதிவுசெய்கிறோம்’ என அவரிடம் சொல்லிவிட்டேன். அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

அண்ணாதுரை எம்.எல்.ஏ-விடம் பேசினோம். “மண்டல தாசில்தார் அனுமதி கொடுத்த நிலையில், தாசில்தார் `நான்தான் மண் எடுக்க அனுமதி தர வேண்டும்’ எனச் சொன்னதுமே மண் எடுப்பதை நிறுத்திவிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்ய இருப்பதாக, அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டுதன் பேரில், நான் டி.எஸ்.பி-யிடம் பேசினேன். அதில் டி.எஸ்.பி-யிடம் முரண்பாடாகவோ, விதிமீறலாகவோ நான் பேசவில்லை. கொஞ்சம் வேகமாகப் பேசிய அவர், `வழக்கு பதிவுசெய்து கொள்கிறேன்’ எனக் கூறிவிட்டார்.

போலீஸ் பறிமுதல் செய்த டிராக்டர் மண்ணுடன் நிற்கிறது

நான் வேண்டுகோளாகத்தான் இதைக் கேட்டேனே தவிர, வண்டியை விடச்சொல்லியும், வழக்கு பதியவேண்டாம் எனவும் அவருக்கு மிரட்டலோ, அழுத்தமோ கொடுக்கவில்லை. நானும் அவரும் போனில் பேசியது எப்படி வெளியே கசிந்தது என்றுதான் தெரியவில்லை. நான் யார் பேசுவதையும் ரெக்கார்டு செய்வது கிடையாது, அந்த டெக்னாலஜி குறித்தும் எனக்குத் தெரியாது. அப்படி என்றால் டி.எஸ்.பி போனில்தான் ரெக்கார்டு ஆகியிருக்க வேண்டும். திட்டமிட்டே அந்த ஆடியோவை வெளியே கசிய விட்டிருக்கின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.