கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வீடு புகுந்து அரிசியை சாப்பிட்டதால் அரிசிக்கொம்பன் என அப்பகுதி மக்களால் பெயர் வைக்கப்பட்ட யானை கடந்த சில மாதங்களாக பேசுபொருள் ஆகி உள்ளது. இடுக்கியில் 8-க்கும் மேற்பட்ட உயிர்களை காவுவாங்கிய அரிசிக்கொம்பன் யானை கேரள வனத்துறையால் பிடிக்கப்பட்டு தமிழக – கேரளா எல்கையான பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டு விடப்பட்டது.
யானை தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து தமிழக வனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி மிகவும் பாதுகாப்பாக லாரி மூலம் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மேல கோதையாறு அணைப்பகுதியில் கொண்டு விட்டனர். தொடர்ந்து வனக் குழுவினர் அமைக்கப்பட்டு யானையை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர்.
அரிசிக்கொம்பன் யானை மீது ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை யானை இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்தில் பதிவாகி வந்தது. கடந்த இரண்டு நாட்களாக யானையினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருந்த அப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அப்பர் கோதையாரில் இருந்து அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் குற்றியாறு மலைகாட்டு பகுதியில் வந்து விட்டதாக குமரி மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முத்துகுழி வயல் மற்றும் குற்றியாறு பகுதிகளில் தீவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானை குறித்து பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. “தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு முண்டந்துறை வனப்பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் யானையின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரிசிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து இதை வன அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை” என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.