கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாகலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், உயிரிழந்த கிடந்த பெண் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த பூங்கொடி (48) என்பதும், இவருக்கும், மாரசந்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசப்பா (65) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பூங்கொடி கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேசப்பாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது வெங்கடேசப்பா விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து வெங்கடேசப்பா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேசப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் பூங்கொடி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.