புதுடெல்லி: நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பனிலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை 62 நாள்கள் நடைபெறவுள்ளது. அதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை யாத்திரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. பனிலிங்கத்தைத் தரிசிக்க ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில் அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்தொழில்நுட்ப கண்காணிப்பும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் போலீஸார், சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர், ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பு அமர்நாத் யாத்திரைக்கு வழங்கப்படும்.
அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புவழங்க 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
அடிப்படை வசதி: கூட்டத்துக்குப் பின்னர் அமித் ஷா கூறும்போது, “அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. பக்தர்களுக்கு வசதியான தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி, தங்கும் வசதிகள் செய்து தரப்படும். அடிவார முகாம்கள், பல்டால், பஹல்காம் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்’’ என்றார்.
கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலர், உளவுத்துறை செயலர், சிஆர்பிஎப், எல்லையோர பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) டிஜிபி, எல்லைச் சாலை அமைப்பின் (பிஆர்ஓ) டிஜி, வடக்கு கமாண்ட் ராணுவப் பிரிவின் பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்தாண்டு 3.45 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்த நிலையில், இந்தாண்டு பக்தர்களின்எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.