அரியலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்த துக்கத்தில் தந்தை மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(26). இவரது மனைவி திவ்யா. இவர்களது குழந்தை விக்ஷன்(2). இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை விக்ஷன், கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை இறந்த துக்கத்திலிருந்த தினேஷ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று காலை கையில் கம்பியை சுற்றிக்கொண்டு சுவிட்ச் பாக்ஸில் கை வைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக தினேஷ் உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமானூர் போலீசார் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.