கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சால் சர்ச்சை

பஸ்தார்: “கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். முகலாய மன்னர்கள் போல் வந்தேறியவர்கள் அல்ல” என்று அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கிரிராஜ் சிங் இரண்டு நாட்கள் பயணமாக பிஹார் சென்றுள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சில விஷயங்கள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது என்ன? “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். அவர் பாபர், அவுரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், அவுரங்கசீபின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க இயலாது” என்றார்.

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் திப்பு சுல்தான், அவுரங்கசீப் போன்றோரை புகழ்ந்தும் மராட்டிய மன்னர்களை சிறுமைப்படுத்தியும் சமூக வலைதளங்களில் வெளியான பதிவால் கலவரம் மூண்டது. அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மேற்கொண்ட பந்த் கலவரமாக மாறியது. போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டத்தை அடக்கினார்கள். இதற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கண்டனம் தெரிவித்தார். கலவரத்தைக் கண்டித்த அதே வேளையில் இதுபோன்ற முகலாய மன்னர்களைப் புகழ்வதுபோன்ற விஷமங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றார்.

மேலும் “அவுரங்கசீப்பை துதிபாடுவதை அனுமதிக்க முடியாது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் எங்கிருந்து திடீரென அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் தோன்றினார்கள் எனத் தெரியவில்லை” என்றும் பட்நவிஸ் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “பாஜக தலைவர் பட்நவிஸ் வழித்தோன்றல்களை அடையாளம் காண்பதில் நிபுணராக இருக்கிறார். அப்படியே அவர் கோட்ஸேவின் வழித்தோன்றல்களையும் அடையாளம் கண்டால் நன்றாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஓவைசி கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங், “கோட்ஸே காந்தியைக் கொலை செய்திருந்தாலும் கூட அவர் இந்தியாவில் பிறந்தவர். பாபர், அவுரங்கசீப் போல் படையெடுத்து வந்த முகலாயர்கள் அல்ல. அதனால் அவுரங்கசீப், பாபரை, திப்பு சுல்தானைக் கொண்டாடுபவர்கள் இந்தியாவின் மகன்களாக இருக்க இயலாது” என்று கூறியுள்ளார். அவருடைய கருத்தால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.