ஆனந்த விகடன் யூடியூப் சேனலின் ‘பாட்டுத்தலைவன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இளம் பாடலாசிரியர் அருண் பாரதி.
அருண்பாரதி என்ற பெயர் வைத்துக்கொள்ள என்ன காரணம்?
என்னுடைய உண்மையான பெயர் அருண்குமார். பாரதி என்ற பெயர் நான் சேர்த்துக் கொண்டது தான். எனக்கு பாரதிதாசனுடைய கவிதைகள் ரொம்பப் பிடிக்கும்.அவருடைய ‘நூலைப் படி’என்ற கவிதையில் இடம்பெற்ற சந்த நயத்தைப் பார்த்து வியந்தேன்.அதன் பின்பு, தான் பாரதியின் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் பாரதியும், பாரதிதாசனும் கதாநாயகனாகத் தான் தெரிகின்றனர். அதனால் தான் என் பெயருடன் பாரதி என்ற பெயரை இணைத்துக் கொண்டேன். 22 வயதில் ‘புதிய பானை பழைய சோறு ‘ என்ற கவிதைத் தொடரில் அருண் பாரதி என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தினேன்.
சினிமா பாடல்கள் மீது உங்களுக்கு எப்போது ஈர்ப்பு வந்தது?
எனக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், சினிமா பாடல்கள் மீதான ஆர்வமும் இயல்பாகவே இருந்தது.என்னுடைய பள்ளி நாட்களின் ஆண்டு விழாவின் போது இளையராஜா,பாரதிராஜா,வைரமுத்து போன்ற சினிமாத்துறையில் கோலோச்சிய நபர்களை அழைத்து வருவார்கள்.அதன் காரணமாகவும் சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது.12ம் வகுப்பு முடித்தவுடன் சினிமா வாய்ப்பு கேட்க பாரதிராஜா சாருக்கு போன் பண்ணிட்டேன். சினிமா வாய்ப்பு கேட்க பாரதிராஜா சாருக்கு போன் பண்ணுனேன். `உனக்கு சினிமால என்ன தெரியும்னு’ கேட்டாரு. எனக்கு கவிதை எழுத தெரியும்னு சொன்னேன். கவிதைக்கும் சினிமாக்கும் என்னயா சம்பந்தம்னு கேட்டாரு.`படிச்சு முடிச்சுட்டு சென்னை வந்து பாருன்னு சொன்னார்.சென்னைக்கு போய் பார்த்த அப்ப பாரதிராஜா ஆஸ்திரேலியா போயிட்டாரு. வர்றதுக்கு ரெண்டு மாசம் ஆகும்’னு சொன்னாங்க. சென்னை வந்த போது தான் நாம் திரையில் பார்க்கும் சினிமா வேறு ; சினிமாவிற்குள் வந்து வாய்ப்பு கிடைக்க போராடும் முறை வேறு என்ற யதார்த்தம் புரிந்தது. நான் கோயம்பேடு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே வாய்ப்பு தேடி அலைந்தேன்.
சினிமாவில் ஏற்படும் இடையூறுகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?
சினிமாவிற்காக வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்ற முடிவில் பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் மூர்த்தின்னு ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு சினிமால வாய்ப்பு கிடைக்கலைன்னு ஊருக்குக் கிளம்பிட்டாரு. அப்ப அவரோட சைக்கிளையும் அவர் பார்த்துட்டு இருந்த கொரியர் டெலிவரி வேலையையும் கொடுத்தார். அப்ப கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் தான் எனக்கு வீடு. அப்படியே வாய்ப்பு கிடைக்குமான்னு எதிர்பார்த்துத் தேடிகிட்டே இருப்பேன்.
இயக்குநர் பாக்யராஜ் சாரின் அறிமுகம் கிடைத்தது எப்படி?
எனக்கு சினிமாவுடனான பிடிமானத்தை ஏற்படுத்தித் தந்தவர் பாக்யராஜ் சார் தான். பாக்யராஜ் சார் என்னுடைய கவிதைகளைப் படித்துவிட்டு என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். நான் அவரை அலுவகத்தில் சந்தித்துப் பேசினேன்.உன்னுடைய கவிதைகளைப் படிக்கும்போது எனக்கு என்னுடைய இயக்குநருடன் பணியாற்றிய ஞாபகம் வந்ததுன்னு சொன்னாரு. நான் எழுதிய வேறு சில கவிதைகளையும் கொடுத்தேன். அடுத்த வாரத்துல இருந்து உன்னுடைய கவிதைகள் பத்திரிக்கையில் தொடராக வரும்னு சொன்னாரு.’புதிய பானை பழைய சோறு’என்ற என்னுடைய கவிதைத் தொடர் வெளிவந்தது. டீக்கடையில் நான் எழுதும் கவிதை தொடர் புத்தகத்தைப் பார்க்கும் போது பேரானந்தம் மனதில் குடிகொண்டது.இந்தக் கவிதை கேரள அரசின் பாடத்திட்டத்தில் உள்ளது. என்னுடைய 20 வயது வரை கீபோர்டு எப்படி இருக்கும் என்று பார்த்ததில்லை. கீபோர்டு போன்ற பல இசைக்கருவிகளை பாக்யராஜ் சார் அலுவலகத்தில் தான் பார்த்து மகிழ்ந்தேன்.
பாக்யராஜ் சார் உடனான பணி அனுபவம் எப்படி இருந்தது?
சினிமாவின் மீது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது அவர் தான்.மூன்று பிரபலமான பாடல்களோட மெட்டு எடுத்துட்டு அதுக்கு வரிகள் எழுதிகிட்டு வர சொன்னார். எனக்கு நிறைய பயிற்சி கொடுத்தார்.சந்தத்துடன் பாடல் எழுதும் முறையை அவர் தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.பாக்யராஜ் சார் பாடல்களைத் திருத்தும்போது கணித வாத்தியார் பேப்பர் திருத்தற மாதிரி இருக்கும். பாக்யராஜ் சாருடன் இருந்த மணிஅமுதன் சார் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாரு.சினிமாவில் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தால் தான் நிலைக்க முடியும் என்பதை பாக்யராஜ் சாரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்.
பாடலாசிரியர் அருண் பாரதியின் முழு நேர்காணலைக் காண – க்ளிக் செய்யவும்.