ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அதிருப்தியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்கிவிடுவாரோ? என்ற பதற்றத்தில் காங்கிரஸ் கட்சி இன்று அவரை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் அதி உச்சத்தை எட்டியிருக்கிறது. இருவருக்கும் இடையேயான இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர டெல்லி மேலிடம் தீவிரம் காட்டியது. இருவரையுமே டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்போம்; கர்நாடகா பாணியில் வெல்வோம் என்றெல்லாம் சூளுரைத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.
ஆனால் இந்த அமைதி ஒப்பந்தமானது சில நாட்கள்தான் நீடித்தது. பின்னர் திடீரென ஜூன் 11-ந் தேதி சச்சின் பைலட் தனி கட்சி தொடங்கப் போகிறார்; ஜூன் 11-ந் தேதி சச்சின் பைலட் தந்தை ராஜேஷ் பைலட் நினைவுதினம். ஒவ்வொரு மாதமும் 11-ந் தேதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சச்சின் பைலட் இம்முறை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்றன அந்த செய்திகள்.
இந்த செய்திகள் காங்கிரஸ் கட்சியை நிலைகுலைய செய்தது. கர்நாடகா பாணியில் ராஜஸ்தானில் வெல்லலாம் என கனவு கண்ட காங்கிரஸ் மேலிடத்துக்கு இது பேரிடியாக இருந்தது. இதனால் உடனடியாக இந்த தகவல் வதந்தி இதனை யாருமே நம்பாதீங்க என்றெல்லாம் காங்கிரஸ் மன்றாடிப் பார்த்தது. ஆனால் இப்போதுவரைக்கும் சச்சின் பைலட் வாயே திறக்கவில்லை
#WATCH | Dausa, Rajasthan: Congress leader Sachin Pilot pays tribute to his father Rajesh Pilot on his death anniversary pic.twitter.com/c1xmqs0Nxs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 11, 2023
இந்நிலையில் இன்று தந்தையின் நினைவு தினத்தை முட்டி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் சச்சின் பைலட். இருப்பினும் புதிய கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. சச்சின் பைலட் புதிய தொடங்குவாரா? இல்லையா? என அவரது ஒவ்வொரு நகர்வையும் காங்கிரஸ் மேலிடம் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறதாம்.