சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 11) முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ‘பிப்பர்ஜாய்’ வடக்கு திசையில் நகர்ந்து, மும்பையில் இருந்து 620 கி.மீ. தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 600 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 11) ஓரிரு இடங்களிலும், வரும் 12, 13, 14-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 14-ம் தேதி வரைமணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.