சேலம்: தமிழ்நாட்டை சிறப்பான முறையில் வழி நடத்திச் செல்லும் முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார் என சேலம், கருப்பூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் பாமக எம்எல்ஏ-க்கள் சதாசிவம் மற்றும் அருள் ஆகியோர் புகழ்ந்து பேசினர்.
சேலத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாமக-வைச் சேர்ந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் பேசியது: ”சட்டமன்றத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த கட்சி எம்எல்ஏ-க்களாக இருந்தாலும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேச முடிகிறது. நாங்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கிக் கொள்வதோடு, அதன் தீர்வுக்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எடுத்து வருகிறார். மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட பாலமலையில் 75 ஆண்டுகளாக சாலை வசதியில்லை. சாலை வசதிக்காக முதல்வர் ரூ.25 லட்சத்தை ஒதுக்கினார். மேட்டூர் தொகுதிக்கு மட்டும் ரூ.550 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் வழங்கியுள்ளார். கேட்டதெல்லாம் கொடுக்கும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். தமிழ்நாட்டை சிறப்பான முறையில் வழி நடத்தி செல்லும் முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார்” இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் பேசியது: ”நாங்கள் எதிரணியில் இருந்தாலும், எங்கள் தொகுதிக்கு தேவையான திட்டப்பணிகளை செய்து கொடுப்பதில் அக்கறையுடன் முதல்வர் செயல்படுகிறார். மழை காலங்களில் சிவதாபுரம் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.6.50 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். மேலும், வெள்ளி தொழிலாளர்களுக்கு பன்மாடி தொழில் மையம் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார். இவ்வாறாக முதல்வர் ஸ்டாலினை சொல்லி புகழ வார்த்தைகளே இல்லை.” இவ்வாறு அவர் பேசினார்.