திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி பலர் தாக்கினர். உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்’ என்று தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர்மீது, 120-க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரண பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக்கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.
தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. காஷ்மீர் எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் அவர்களின் மனைவிமீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு உணர வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், “ராமு என்பவரின் கடையை, ராணுவ வீரரின் மனைவி கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு எடுத்து ஃபேன்ஸி ஸ்டோர் ஒன்றை நடத்திவந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக கடையை காலிசெய்யுமாறு ராமு கேட்டு வந்திருக்கிறார். பிப்ரவரியில் கடையை காலிசெய்வதாக ராணுவ வீரரின் மனைவி ஒப்புக்கொண்டார். ஆனால், அதன் பிறகு கடையை காலிசெய்யவில்லை. இப்படியிருக்கவே, ஜூன் 10-ம் தேதியன்று ராமு கடைக்குச் சென்று ராணுவ வீரரின் மனைவியிடம் கடையை காலிசெய்யுமாறு கூறினார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ராணுவ வீரரின் மனையின் மைத்துனர் ஜீவா என்பவர் ராமுவை கத்தியால் தலையில் பலமாகத் தாக்கினார். இதைப் பார்த்த மற்ற கடைக்காரர்கள், கடைக்கு வெளியிலிருந்த பொருள்களைத் தூக்கி வீசினர். பிறகு போலீஸார் அங்கு சென்று கூட்டத்தைக் கலைத்தனர். இப்போதைக்கு முதற்கட்ட விசாரணையில், ராணுவ வீரரின் மனைவியை யாரும் மானபங்கம் செய்யவில்லையென்றும், ராணுவ வீரருக்குத் தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரியவருகிறது. இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ராணுவ வீரரின் மனைவிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.