நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சதுரங்கம், ஹாக்கி, கபடி உட்பட 32 விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேசிய அளவிலான போட்டிக்கு மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் தகுதி பெற்றவர்களை அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்பி வைக்கின்றன.
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை மே 29ஆம் தேதிக்குள் இணையவழியில் பதிவு செய்ய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இருந்து மாணவர்களை தேசிய போட்டிக்கு அனுப்ப பள்ளிக்கல்வித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம் என காத்திருந்த மாணவ மாணவிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும் இழந்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த அலட்சிய போக்கிற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டி, டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்தது குறித்து, கடந்த ஐந்தாம் தேதி அன்று கேள்வி எழுப்பியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அது குறித்து ஊடகங்களில் செய்தியாக வந்தும், தமிழக அரசுக்கு இதுகுறித்து மீண்டும் நினைவூட்டிய பிறகும், இத்தனை நாட்களும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டு, இன்று, முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பார்க்கிறார் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.