கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான புயலுக்கு பிபோர்ஜாய் எனப் பெயரிடப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வந்தது. இன்று காலை தீவிர புயலாக இருந்த பிபோர்ஜாய் சற்றுமுன் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் வேகம் சற்றே அதிகரித்திருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ளது. தற்போது போர்பந்தருக்கு தெற்கு தென்மேற்கில் 480 கிலோமீட்டர் தொலைவிலும், துவராகாவிற்கு தெற்கு தென்மேற்கில் 530 கிலோமீட்டர் தொலைவிலும், நலியாவிற்கு தெற்கு தென்மேற்கில் 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருகிறது. வரும் 15ஆம் தேதி நண்பகலில் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள மாண்டவி, குஜராத், கராச்சி ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த புயலால் இந்தியாவிற்கு பெரிதாக பாதிப்புகள் இல்லை என்றே தெரிகிறது.
இதற்கிடையில் வடமேற்கு பாகிஸ்தானில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். 145 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக பன்னு, லக்கி மார்வாத், காரக் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு முறிந்து விழுந்த மரங்கள், சாய்ந்துள்ள மின் கம்பங்கள் ஆகியவற்றை சரிசெய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காயமடைந்த பொதுமக்களுக்கு தேவையான அவசர கால நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன.