சென்னை: திமுக கட்சியின் புதிய பொலிவூட்டப்பட்ட இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின்நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவல் புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட ‘DMK.in’ வலைதளத்தை கலைஞர்-100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை திமுக கடந்துவந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்’ என தெரிவித்துள்ளார்.