சென்னை: Ilayaraaja (இளையராஜா) இளையராஜா பெயர் வரும் பல பாடல்களுக்கு தான் இசையமைத்ததாக கங்கை அமரன் தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.
அன்னக்கிளி: அன்னகிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
இயக்குநர்களின் காத்திருப்பு:இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கு இசையமைத்தார். அந்த ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி. தொடர்ந்து இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவ சமீபத்தில்தான் 80ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
கங்கை அமரன்: இளையராஜா எப்படி இசையமைப்பாளரோ அதேபோல் அவரது சகோதரர் கங்கை அமரனும் இசையமைப்பாளர். பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார்.மேலும் பல பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “இளையரஜா இசையமைத்ததாக நீங்கள் நினைக்கும் பல பாடல்கள் நான் இசையமைத்தவை.
வெளியூர் சென்றால்: அண்ணன் இளையராஜா வெளியூருக்கு சென்றிருந்தால் நான் தான் இசையமைப்பேன். நான் தனியாக இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னதாக இளையராஜாவிடம் வந்த பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்த ஞானம்தான் என்னையும் இசையமைப்பாளராக்கியது. உதாரணமாக ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் படத்துக்கு நான் இசை. ஆனால் பெயர் இளையராஜா பெயர் வரும். அதையெல்லாம் வெளியில் சொன்னது கிடையாது” என்றார்.
மகன் மட்டுமில்லை தம்பியுமா?: கங்கை அமரனின் இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.மேலும், ரஜினி தயாரித்த வள்ளி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு கார்த்திக் ராஜாதான் இசை என ரஜினியே ஒரு மேடையில் கூறியிருந்தார். இப்போது கங்கை அமரனும் இவ்வாறு கூறியிருக்கிறார். ரஜினி மற்றும் கங்கை அமரனின் கூற்றை ஒப்பிட்ட சில ரசிகர்கள் மகனின் உழைப்பை மட்டுமில்லை தம்பியின் உழைப்பையும் இளையராஜா அபகரித்திருக்கிறாரா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.