மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தென்கொரிய முதலீட்டாளர்கள் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு இணங்க தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜா தலைமையிலான குழுவினரும் தென்கொரிய முதலீட்டாளர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது .

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள வளங்களை தென் கொரிய முதலிட்டாளர்கள் அறிந்து கொள்ளுவதற்கான முன்னளிக்கை மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மாவட்டத்தின் பிரதான உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தினர்.

மாவட்டத்தில் சூரிய மின்சார உற்பத்திக்கு உகந்த காலநிலை காணப்படுவதனால் களப்பில் மிதக்கும் ஒளி மின்னழுத்தியங்கள் (solar panel) மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்வதன் சாதக விளைவுகள் குறித்து துறை சார் நிபுணர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தென்கொரிய அரசாங்கத்தின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான பொறுப்பதிகாரி கலாநிதி ஜெ.எச்.லி, பணிப்பாளர் சீயோல் கியூ லீ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, தவிசாளர் அத்துல பி.அபயகோன் , இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உதவி பணிப்பாளர் ஷிரான் ரத்நாயக்க,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.