இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மைத்தேயி இனமக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கவே கூடாது என்பதற்கான போராட்டம்தான் பெரும் வன்முறையாக வெடித்தது.
தற்போது குக்கி இனக்குழுவினர் ஆயுதங்களை கைகளில் ஏந்தி உள்ளனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களைப் பறித்து இத்தாக்குதல்களை குக்கி இனக்குழுவினர் நடத்துகின்றனர்.
மணிப்பூரில் கிராமங்களுக்குள் சோதனை என்ற பெயரில் ராணுவ உடையில் குக்கிகள் உள்ளே நுழைகின்றனர். மைத்தேயி இனக்குழுவினரை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கின்றனர். இதனால் மணிப்பூரில் வன்முரைகள் ஓயாமல் நீடித்து கொண்டே இருக்கிறது.
மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் மணிப்பூர் மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
இதனிடையே மணிப்பூரில் வன்முறைகள் ஓயாத நிலையில் அம்மாநிலத்தில் வரும் 15-ந் தேதி வரை இணைய சேவை இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.