மத்திய அரசின் அவசரச் சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்: கெஜ்ரிவால்

புதுடெல்லி: மத்திய அரசின் அவசரச் சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆளுநரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆளுநரின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு அளிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரைச் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார்.

இதன் தொடர்ச்சியாக இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், “12 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ராம் லீலா மைதானத்தில் ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்காகக் கூடினோம். தற்போது, சர்வாதிகாரியை அகற்ற ஒன்றுகூடியுள்ளோம். அதற்கான இந்த பிரச்சாரம் பலன் தரும்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரதமர் மோடி மீறி இருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த ஆணவப் போக்கு; சர்வாதிகாரப் போக்கு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவசரச் சட்டத்தை இயற்றியதன் மூலம் அவர் டெல்லி மக்களை அவமதித்துள்ளார். இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராடும். இந்த அவசரச் சட்டம் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படும். அதன் மூலம் ஜனநாயகம் காக்கப்படும்.

இத்தகைய அவசரச் சட்டத்தை மத்திய அரசு, டெல்லியோடு நிறுத்தாது. இதுபோன்ற சட்டத்தை அவர்கள் விரைவில் மாநிலங்களுக்கும் கொண்டு வருவார்கள். நரேந்திர மோடியின் 21 ஆண்டு கால ஆட்சியை, எனது 8 ஆண்டு கால ஆட்சியோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவரைவிட எனது பணிகள் அதிகம். இத்தனைக்கும் மோடிக்கு இருந்த அளவு எனக்கு அதிகாரம் இல்லை. டெல்லியின் கல்வி அமைச்சராக இருந்த மணிஷ் சிசோதியாவை அவர்கள் சிறையில் அடைக்கலாம். ஆனால், ஒரு மணிஷ் சிசோதியாவை நீங்கள் சிறையில் அடைத்தால் 100 மணிஷ் சிசோதியாக்கள் உருவாகுவார்கள்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.