திருவண்ணாமலை:
தனது மனைவியை 120 பேர் சேர்ந்து மானபங்கப்படுத்தி அரை நிர்வாணமாக்கி தாக்குகிறார்கள் என்றும், அவர்களிடம் இருந்து தனது மனைவியை காப்பாற்றித் தருமாறும் காஷ்மீரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முதல் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:
தமிழக டிஜிபி ஐயாவுக்கு வணக்கம். என் பெயர் அவதார் பிரபாகரன். நான் இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் பணிபுரிகிறேன் ஐயா. என் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமம் ஐயா. என் மனைவி அந்தப் பகுதியில் கடை நடத்தி வருகிறார். இன்னைக்கு (ஜூன் 10) 120 பேர் சேர்ந்து எங்க கடையை அடிச்சு நொறுக்கிருக்காங்க. என் மனைவிய அடிச்சதுல அவங்களுக்கு மூக்கு, வாய்ல ரத்தம் கொட்டி ஆஸ்பத்திரில சேர்ந்திருக்காங்க. என்னாச்சு ஏதாச்சுனே தெரியலங்க ஐயா.
ஊர்ல என் மனைவிக்கு எந்தவொரு பாதுகாப்புமே இல்ல. இது சம்பந்தமா எங்க ராணுவ அதிகாரி, திருவண்ணாமலை எஸ்.பி.க்கு பெர்சனலா பேசுனாங்க. அப்போ இதுதொடர்பாக ஒரு புகார் கடிதத்தை அனுப்புங்க.. கண்டிப்பா நடவடிக்கை எடுக்குறேன்னு எஸ்.பி. கார்த்திகேயன் ஐயா சொல்லிருக்காங்க. லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்றாங்க. ஐயா எப்படியாச்சும் என் மனைவியை காப்பாத்துங்க ஐயா. கத்தி எடுத்து வெட்ட வர்றாங்க ஐயா. காப்பாத்துங்க ஐயா.
ஒரு ராணுவ வீரனா இருந்துட்டு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சக் கூடாதுனு சொல்வாங்க. ஆனா எனக்கு வேற வழி தெரியலங்க ஐயா. (முழங்காலிட்டு கையெடுத்து கும்பிடுகிறார்) தயவுசெஞ்சு எங்க குடும்பத்தை காப்பாத்துங்க ஐயா என ராணுவ வீரர் பிரபாகரன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து திருவண்ணாமலை போலீஸார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்றும் வீரரின் குடும்பத்தினருக்கே இந்த நிலைமையா என இந்த வீடியோவை பார்த்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.