Indian Cricket Team: 2014ஆம் ஆண்டில் இருந்து ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி, தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கோப்பையை இந்தியா தவறவிட்டுள்ளது. 2014இல் இருந்து தற்போது வரை இந்தியா தோல்வியுற்ற நாக்-அவுட் போட்டிகளை இங்கு காணலாம்.
2014 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி
இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று, அடுத்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் இந்தியா – இலங்கை அணி 2014இல் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் மோதியது. 2013இல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு அடுத்து, தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை தூக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப்போட்டியில், விராட் கோலி 77 ரன்களை அடித்தும், இந்தியாவால் அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியவில்லை. 130 ரன்கள் என்ற இலக்கை இலங்கை எளிதாக கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தூக்கியது.
2015 50 ஓவர் உலகக்கோப்பை
ஒருநாள் அரங்கில் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா 2015 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை சந்தித்தது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்தில் நடைபெற்ற அந்த தொடரின் லீக் போட்டிகளை அனைத்தையும் வென்ற இந்தியா, அரையிறுதியில் நுழைந்து ஆஸ்திரேலியாவுடன் மோதியது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 328 ரன்களை விளாசியது. ஸ்டீவ் ஸ்மித்தின் 105 ரன்கள் அவர்களுக்கு பேரூதவியாக இருந்தது. ஆனால், சேஸ் செய்த இந்தியாவால் 233 ரன்கள் எடுக்க முடிந்தது. அந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, மிட்செல் ஜான்சன் பந்துவீச்சில் 1 ரன்னில் வெளியேறியதை இன்றும் பலராலும் மறக்க முடியாது.
2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி
இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்றது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. ஆனால் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் மண்ணை கவ்வி வெளியேறியது. லென்டில் சிம்மன்ஸ் அதிரடியால் இந்திய அணி நிர்ணயித்த 192 இலக்கை அந்த அணி எளிதாக அடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதில், கார்லோஸ் பிராத்வெயிட் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்களை அடித்து உலகக்கோப்பையையும் அந்க அணிக்கு வென்றுகொடுத்தார்.
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி
மற்றொரு ஐசிசி தொடர் மற்றும் மற்றொரு பட்டமும் இந்தியாவுக்காக காத்திருக்கிறது. ஓவலில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானிடம் வீழ்ந்ததே இல்லை என்ற பெருமையை இந்தியா அப்போது வைத்திருந்தது. இருப்பினும், இளம் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் 114 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 338 ரன்களை எடுத்தது. இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கோப்பையையும், பாகிஸ்தானுக்கு எதிராக வைத்திருந்த சாதனையையும் ஒரே கணத்தில் தவறவிட்டது.
2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி
இந்த போட்டி நிச்சயம் இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. மழையின் காரணமாக இரண்டு நாள்கள் நநடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அது அமைந்தது. தோனியின் ரன்-அவுட் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் அப்படியே பதிந்துவிட்டது எனலாம்.
2021 WTC இறுதிப் போட்டி
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. டெஸ்டில் அரங்கில் விராட் கோலி இந்தியாவை முன்னணிக்கு கொண்டு வந்த காலகட்டம் அது எனலாம். எப்படியும் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பை இந்திய அணி மீண்டும் பொய்யாக்கியது.
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி
இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது. இதில், இங்கிலாந்து அணியை இந்தியா சந்தித்தது. 169 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதிலும் வென்று கோப்பையை தூக்கியது.
2023 WTC இறுதிப் போட்டி
விராட் கையில் இந்த முறையாவது கோப்பை வரும் என எதிர்பார்த்த நிலையில், இதையும் இந்தியா கோட்டைவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக இந்திய அணி 2வது முறையாக தோல்வியை தழுவியது.