
யோகி பாபுவின் தூக்குத்துரை படத்தின் டீசர் வெளியானது!
யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தூக்குத்துரை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இனியா நடித்து இருக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், சென்ட்ராயன், பால சரவணன், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி உள்ளார். இவர் ட்ரிப் என்ற படத்தை இயக்கியவர். கிராமத்துக் கதையில் உருவாகியுள்ள இந்த தூக்குத்துரை படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில், ஒரு பழமையான கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றில் விலைமதிப்பற்ற கிரீடம் உள்ளது. அதை திருடுவதற்காக யோகி பாபு தலைமையிலான சிலர் கிராமத்துக்குள் வருகிறார்கள். அப்படி திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் போது, யோகி பாபுவுக்கும் இனியாவுக்கும் இடையே காதல் உருவாகிறது. அதையடுத்து திட்டமிட்டபடி கோவில் கிரீடத்தை திருடினார்களா? யோகி பாபு – இனியா ஒன்று சேர்ந்தார்களா? என்பதே இப்படத்தின் கதை என்பதை டீசரில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதோடு, யோகி பாபு நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்பது டீசரில் தெரிகிறது.