சென்னை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலும் மழையும் மாறி மாறி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று இரவு எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யப் போகிறது என்ற அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதன் தாக்கத்தின் காரணமாக தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை தலையை காட்டி செல்கிறது. சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை பொறுத்தவரை வெப்பச்சலனம் மற்றும் கடல் காற்றின் காரணமாக மழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு தினங்களாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கர சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், இன்று இரவு தமிழகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யப்போகிறது என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவில், “திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு மழை மேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று இரவு மீஞ்சூர், மணலி, சோழவரம், பொன்னேரி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். அதேபோல, சென்னையின் மேற்கு பகுதிகளிலும் சூறைக்காற்று நகர்ந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.