புதுடெல்லி: அந்நிய பரிவர்த்தனை விதிகளை மீறி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.5,551 கோடி பரிவர்த்தனை செய்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
ஷாவ்மியின் இந்தியப் பிரிவு அந்நிய பரிவர்த்தனையில் விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது. அந்நிறுவனம், 2015-ம் ஆண்டு முதல் ரூ.5,551 கோடியை ராயல்டி என்ற பெயரில் 2 அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் 1 சீன நிறுவனம் என மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியது சோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் கணக்கில் இருந்து அமலாக்கத்துறை ரூ.5,551 கோடியை பறிமுதல் செய்தது.
அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஷாவ்மி நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி அம்மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.5,551 கோடிக்கு விளக்கம் கேட்டு ஷாவ்மி இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை கூறுகையில், “அந்நிய பரிவர்த்தனை விதிகளை மீறிய வழக்கில் விளக்கம் கேட்டு ஷாவ்மி நிறுவனத்துக்கும் அதன் தலைமை நிதி அதிகாரி சமீர் ராவ் மற்றும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு சிஐடிஐ வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, டொய்சே வங்கி ஆகிய மூன்று வெளிநாட்டு வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் ஷாவ்மி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அந்நிறுவனம், பரிமாற்றம் செய்த தொகையில் இருந்து கூடுதலாக இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.