சென்னை:
தன்னை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான அறிவிப்பை நடிகர் எஸ்.வி. சேகர் சரமாரியாக கலாய்த்து தள்ளியுள்ளார்.
தமிழக பாஜகவில் அண்மைக்காலமாக கோஷ்டி பூசல்களுக்கு குறைவில்லாமல் இருந்து வருகிறது. அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச். ராஜா, தமிழிசை செளந்தரராஜன் என முக்கிய தலைவர்களுக்கு கீழ் பல கோஷ்டிகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதில் பலரும் தற்போது அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. இதில் முக்கியமானவராக கருதப்படுபவர் எஸ்.வி. சேகர்.
சமீபகாலமாக அண்ணாமலையை மிக மோசமாக எஸ்.வி. சேகர் விமர்சித்து வருகிறார். பாஜகவில் உள்ள பிராமணர்களுக்கு அண்ணாமலை எதிரானவர் எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அவர், அண்மையில் “அண்ணாமலைக்கு இருப்பதெல்லாம் ஒரு மூஞ்சி. இந்த மூச்சியை பார்த்தால் யாராவது ஓட்டு போடுவார்களா?” என பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, எஸ்.வி. சேகரின் இந்த பேச்சால் அண்ணாமலையில் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதில் அவரது தீவிர ஆதரவாளராக கருதப்படும் பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ். ஷா, எஸ்.வி. சேகரை கண்டித்து அவரது உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் இந்த அறிவிப்பை எஸ்.வி. சேகர் பயங்கரமாக கிண்டல் அடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஐயையோ 500 போலீஸ் பாதுகாப்புடன் 100 பேர் போராட்டம். எந்த அதிகாரமும் இல்லாத பொருளாதாரம் உயர்த்தும் பிரிவு. அணியிலேயே பிரிவு. பிரிவு விளங்கிடும். என் டிராமாவை விட அதிக காமெடி. ரசியுங்கள்” என எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.