மும்பை: Adipurush Review (ஆதிபுருஷ் விமர்சனம்)ஆதிபுருஷ் படம் மிகப்பெரிய டார்ச்சர் என்று ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் உமைர் சந்து என்பவர் தெரிவித்திருக்கிறார்.
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமான ஜூன் 16ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
ட்ரோலை சந்தித்த டீசர்: படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது கிராஃபிக்ஸ் படமா இல்லை கார்ட்டூன் படமா. கார்ட்டூன் நாடகங்களுக்குக்கூட நல்ல டெக்னிக்கல் டீம் இருந்து உழைக்கும். அதை விட இந்த டீசரின் க்ராஃபிக்ஸ்கள் படுமோசமாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து கிராஃபிக்ஸ் தரம் உயர்த்தப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆதிபுருஷ் ட்ரெய்லர்: இந்தச் சூழலில் படத்தின் முதல் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. டீசரை ஒப்பிடுகையில் முதல் ட்ரெய்லரில் கிராஃபிக்ஸ் தரம் ஓரளவு சுமார் என்ற பெயரை எடுத்தது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதுமட்டுமின்றி ஆறாம் தேதி நடந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அது ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியா இல்லை ஜெய் ஸ்ரீராம் மாநாடா என ஓபனாகவே கேள்வியை முன்வைத்தனர்.
முதல் விமர்சனம்: படம் இன்னும் ஐந்து நாட்களில் வெளியாகவிருக்கும் சூழலில், சென்சார் போர்டு உறுப்பினர் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஆதிபுருஷ் டார்ச்சர் என பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மற்றொரு ட்வீட்டில் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மோசமாக இருக்கிறது என்றும், பிரபாஸ் நடிப்பு பள்ளி சென்று நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு ட்வீட்களும் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளன.
அனுமனுக்கு ஏன் இருக்கை: முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை அனுமனுக்காக ஒதுக்கப்படும் என தெரிவித்தது. இதனை பார்த்த ரசிகர்கள், எதற்காக இந்த தேவையில்லாத வேலை என அதையும் மீம்ஸ் மூலம் வறுத்தெடுக்க தொடங்கினர். அதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் என்ன பயன் வந்துவிடப்போகிறது என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர்.
இயக்குநர் விளக்கம்: இதனையடுத்து விளக்கமளித்த இயக்குநர் ஓம் ராவத், சிறு வயதிலிருந்தே எங்கு ராமாயண நாடகம் நடந்தாலும் அங்கு அனுமன் நேரில் வருவார் என்ற ஐதீகம் பின்பற்றப்பட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார். அதனால்தான் இப்போது ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் அனுமனுக்கு ஒரு இருக்கை இருக்கும்படி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொண்டோம் என தெரிவித்திருந்தார்.