சீனா சில காலமாக கியூபாவை உளவு பார்த்ததாகவும், 2019-ல் அதன் உளவுத்துறையின் வசதிகளை மேம்படுத்தியதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானில் கடத்திச் செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது இந்து சிறுமி, அவரின் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்திருக்கிறது.
சோமாலியாவில் ஒரு ஹோட்டலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 காவலர்கள் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
பிரான்ஸில் 16 வயது சிறுமி ஒருவர், `ஸ்கார்ஃப் கேம்’ எனப்படும் ஆபத்தான டிக் டாக் சவாலை முயன்று உயிரிழந்தார். இது கடந்த ஆண்டு பலரைக் கொன்ற `ப்ளாக் அவுட்’ சவாலைப்போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வீட்டில் பெட்ரூம், பாத்ரூம் உள்ளிட்ட இடங்களில், முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தது போன்ற 6 புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
கனடாவில் காட்டுத்தீயால் எழுந்திருக்கும் புகை, நார்வே வரை பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். 75 மில்லியன் மக்கள் காற்றின் தரம் குறைந்திருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரிட்டனில் 755 ஆண்டுகள் ஆண்கள் மட்டுமே வகித்து வந்த தலைமை நீதிபதி பதவிக்கு முதன் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இறுதி பட்டியலில் டேம் விக்டோரியா ஷார்ப், மூத்த நீதிபதியாகவும், டேம் சூ கார் என்பவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டான். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
லித்துவேனியா (lithuania) நாட்டில், பாரம்பர்ய பீட்ரூட் உணவான “பிங்க் சூப்” (Saltibarsciai) திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் அந்நாட்டின் பலபகுதிகள் பிங்க் நிறத்தில் மாறின.
நெட்ஃபிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்ட் பகிர்வதில் விதித்த கட்டுப்பாட்டுக்குப் பின்னர், அமெரிக்காவில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.