Forced marriage of Hindu girl; Court refusal to send with parents | ஹிந்து சிறுமிக்கு கட்டாய திருமணம்; பெற்றோருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கராச்சி: பாகிஸ்தானில், 14 வயதான ஹிந்து சிறுமியை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து, பாக்., நீதிமன்றம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரது மகள், சோஹானா சர்மா குமாரி, 14.

இந்த சிறுமி, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம், ‘டியூஷன்’ படித்தார்.

டியூஷன் சொல்லிக் கொடுக்கும் நபர், சமீபத்தில் அந்த சிறுமியின் வீட்டுக்கு, ஒரு கும்பலுடன் வந்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். பெற்றோர் கெஞ்சி கேட்டும், சிறுமியை விடவில்லை.

இது குறித்து திலீப் குமார், போலீசில் புகார் அளித்தார். ஐந்து நாட்களுக்குப் பின், அந்த சிறுமியை போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது அந்த சிறுமி, டியூஷன் சொல்லிக் கொடுத்த நபர், தன்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பெற்றோருடன் அனுப்பி வைக்கும்படியும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘அந்த சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போதைக்கு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.

‘பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட முடியாது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை, அந்த சிறுமியை காப்பகத்தில் தங்கியிருக்க உத்தரவிடுகிறேன்’ என்றார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.