Ilayaraaja Vs Vairamuthu – இளையராஜா Vs வைரமுத்து.. பிரச்னை எங்கு ஆரம்பித்தது?.. இதுதான் காரணமா

சென்னை: Ilayaraaja Vs Vairamuthu (இளையராஜா Vs வைரமுத்து) இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து புதிய தகவல் தெரிய வந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை முதல்முதலாக எழுதினார் வைரமுத்து. முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என புதுமையாக எழுதி இளையராஜாவின் மனதிலும், ரசிகர்களின் மனதிலும் தனது தடத்தை பதித்துவிட்டார்.

ராஜா – வைரமுத்து கூட்டணி: அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகிவிட்டார் வைரமுத்து. அதிலும் பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தின. அவர்கள் இணைந்த முதல் மரியாதை, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை.

உடைந்த கூட்டணி: ஆனால் யார் கண் பட்டதோ இளையராஜா – வைரமுத்து கூட்டணி உடைந்துபோனது. அதற்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டுமென பலர் முயன்றனர். ஆனால் இன்றுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இதுகுறித்து சில வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்த வைரமுத்து, “நாங்கள் இருவரும் இணைந்து பழையபடி பாடல்களை கொடுத்தால் ரசிகர்களை புதுமையை எதிர்பார்ப்பார்கள்;

தற்போதைய வழக்கப்படி பாடல்களை கொடுத்தால் இவர்களுடைய பழைய ஸ்டைல் எங்கே போயிற்று என கேட்பார்கள். எனவே இந்த சிக்கல் வராமல் இருப்பதற்கு நாங்கள் இணைந்து பணியாற்றாமல் விலகி இருப்பதுதான் நல்லது”என கூறியிருந்தார்.

தூதுவிடும் வைரமுத்து?: இதற்கிடையே வைரமுத்து பல வருடங்களாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் வைத்திருந்த கூட்டணியும் உடைந்தது. இப்படிப்பட்ட சூழலில் சமீபகாலமாக இளையராஜா குறித்து வைரமுத்து பொதுவெளிகளில் பேசி வருகிறார். இது ஆரோக்கியமான ஒன்றாக பலரால் கருதப்படுகிறது.

இருப்பினும் ஏ.ஆர்.ரஹ்மானுடனான கூட்டணி உடைந்ததால் இளையராஜாவுக்கு வைரமுத்து தூது விடுகிறார் என்றும் சிலர் ஒரு வாதத்தை முன் வைத்தனர். ஆனால் நட்பின் அடிப்படையிலும், இளையராஜாவின் திறமையின் அடிப்படையிலும்தான் ராஜாவை வைரமுத்து புகழ்கிறார். தூது எல்லாம் விடவில்லை என வைரமுத்து ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

வருத்தப்பட்ட பாரதிராஜா: சமீபத்தில் பாரதிராஜா அளித்திருந்த பேட்டி ஒன்றில், வைரமுத்துவையும், இளையராஜாவையும் இணைத்து வைக்க எவ்வளவோ முயன்றேன் இருப்பினும் அது நடக்காமலேயே போய்விட்டது என வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். பாரதிராஜா மட்டுமின்றி பலரும் இரண்டு பேரை இணைத்து வைக்க முயன்றதாகவும் அது தோல்வியிலேயே முடிந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இப்படி பலரும் முயன்றும் இருவரும் சேராத அளவுக்கு இருவருக்குள்ளும் அப்படி என்னதான் பிரச்னை என்பதுதான் பல வருடங்களாக இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

என்ன காரணம்?: இந்நிலையில் இருவருக்குமான பிரச்னை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, இளையராஜா பீக்கில் இருந்த சமயம் அவரைப் பற்றி அவரே ஒரு தொடர் எழுத வேண்டும் என வார பத்திரிகை ஒன்று கேட்டதாம். ஆனால் அப்போது பிஸியாக இருந்த இளையராஜா தன்னால் எழுத முடியாது. அதற்கு நேரம் இல்லை. இருப்பினும் டேப் ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்து தருகிறேன் நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் என வார பத்திரிகையிடம் கூறினாராம் இளையராஜா.

உள்ளே வந்த வைரமுத்து: அதற்கு வார பத்திரிகை தரப்பு ஆட்சேபனை தெரிவிக்க; சரி எனது நண்பரான வைரமுத்து எழுதட்டும் என்று கூறினாராம் இளையராஜா. அதன்படி வைரமுத்துவும் எழுத ஆரம்பித்திருக்கிறார். அப்போது வைரமுத்துவிடம் இதை நீதான் எழுதுகிறாய் என்று எப்போதும் சொல்லக்கூடாது என இளையராஜ ஒரு கண்டிஷன் வைத்தாராம்.

ஆனால் வைரமுத்து சில நாள்களில் இதுதொடர்பாக வெளியில் சொல்லிவிட்டதாக இளையராஜாவின் காதுக்கு சென்றதாம். அப்போதிருந்துதான் இருவருக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டதாம். இதனை சினிமாவின் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.