புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், நம் போர்த் திறனை வெளிப்படுத்தும் நோக்கில், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட முன்னணி விமானங்களை உள்ளடக்கிய ஒரு மெகா ஆப்பரேஷனை, அரபிக் கடலில் இந்திய கடற்படை நடத்தி உள்ளது.
சமீபத்தில் அரபிக் கடலில் நடந்த இந்த மெகா ஆப்பரேஷனில், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா, புதிதாக இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் ஆகியவற்றில், ‘மிக் 29 கே’ உள்ளிட்ட போர் விமானங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் வெற்றிகரமாக தரையிறங்கின.
இது குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் நேற்று கூறியதாவது:
அரபிக் கடலில், நம் போர்த் திறனை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட முன்னணி விமானங்களை உள்ளடக்கிய ஒரு மெகா ஆப்பரேஷனை, இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.
இதன் வாயிலாக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை எந்த இடத்திலும் நிலைநிறுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
கடற்படையின் வலிமையை மேம்படுத்துவதற்கான இந்திய கடற்படையின் முயற்சியில், இந்தப் பயிற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
இந்த மெகா ஆப்பரேஷன், தேசிய நலனை பாதுகாப்பதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், நட்பு நாடுகளுடனான உறவை வளர்ப்பதற்கும் நம் நாட்டின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி திட்டமிடுவதில், விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் பங்கு முதன்மையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்