நடிகர்கள்: அபர்சக்தி குரானா, அதிதி ராவ், வாமிகா காபி
இசை: அமீத் திரிவேதி
எபிசோடுகள்: 10
ஓடிடி: அமேசான் பிரைம்
இயக்கம்: விக்ரமாதித்யா மோத்வானி
மும்பை: சுமித்ரா குமாரியை ஹீரோயினாக்கி ராய் டாக்கீஸை உருவாக்கிய ஸ்ரீகாந்த் ராயும் அவர் உருவாக்கிய மதன் குமாரும் சுமித்ரா குமாரியாலே அழியும் கதை தான் இந்த ஜூப்ளி வெப்சீரிஸ்.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான வெப்சீரிஸ் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் டப்பிங் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் கிடைக்கும் இந்த வெப்சீரிஸில் அதிகமான ஆபாச வசனங்கள் இடம்பெற்று இருப்பதால் கலைப் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த வெப்சீரிஸை குடும்பத்துடன் பார்ப்பது ரொம்பவே சிரமம் ஆன விஷயமாக உள்ளது. ஆனாலும், நடிகர்களின் நடிப்புக்காகவும் திரைக்கதை அமைப்புக்காகவும் இந்த வெப்சீரிஸை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாத அளவுக்கு ரசிகர்கள் பார்த்து வருவது தான் இதன் வெற்றியாகவும் மாறி உள்ளது. வாங்க விமர்சனத்துக்குள் செல்வோம்..
ஜூப்ளி வெப்சீரிஸ் கதை: ஆஸ்கர் விருது வாங்கிய ஆர்ட்டிஸ்ட் படத்தைப் போல எல்லாம் இங்கே படம் வராதா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் தான் இந்த ஜூப்ளி. இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே பாலிவுட் ஆரம்பமாகும் முன்னதாக 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்து தொடங்கும் படத்தில் சுதந்திரமான பின்னரும் நடக்கும் நிகழ்வுகளை பீரியட் படமாக கொடுத்திருக்கிறார்.
ராய் டாக்கீஸின் நிறுவனர் ஸ்ரீகாந்த் ராய் ஜம்ஷத் கான் எனும் இஸ்லாமிய நாடக நடிகரை மதன் குமாராக அறிமுகப்படுத்த நினைக்கிறார். ஜம்ஷத் கானை பார்த்த மாத்திரத்திலேயே ஸ்ரீகாந்த் ராயின் மனைவியாக நடித்துள்ள அதிதி ராவ் காதலில் விழுகிறார்.
அவருடன் கராச்சிக்கு ஓடிப் போகவும் நினைக்கிறார். இது பற்றி அறிந்து கொள்ளும் ஸ்ரீகாந்த் ராய் பொண்டாட்டி ஓடிப் போனாலும் பரவாயில்லை என் படத்துக்கான ஹீரோ மதன் குமார் இங்கே வந்தாக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தனது ஸ்டூடியோவில் ரீல்களை கொண்டு செல்லும் வேலையை செய்யும் விசுவாசம் உள்ள பினோத் என்பவரை அனுப்புகிறார்.
ஜம்ஷத் கானை கராச்சிக்கு கொண்டு சென்று நாடகத்தில் நடிக்க வைக்க திட்டமிடுகிறார் இயக்குநர் ஜெய் கன்னா. ஜம்ஷத் கானை தன்னுடன் அழைத்துச் சென்று விட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடும் பினோத் ஜம்ஷத் மரணிக்கவே காரணம் ஆகி விடுகிறார். ஜம்ஷத் கான் இல்லாத நேரத்தில், மதன் குமாராக பினோத் மாறுவதும், ஜம்ஷத் கானின் மரணத்துக்கு பினோத் தான் காரணம் என்பதை அறிந்து கொள்ளும் சுமித்ரா குமாரி சூப்பர்ஸ்டாரான மதன் குமாரை கம்பி எண்ண வைக்க போராடுவதும் கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த ஜூப்ளி படத்தின் கதை.
பக்கா பர்ஃபார்மன்ஸ்: சினிமாவின் கேமராவுக்கு பின்னால் நடக்கும் விஷயங்கள் தான் எப்போதுமே சுவாரஸ்யம் மிகுந்தது என்பார்கள். அந்த விஷயங்களையும் அங்கே நடக்கும் மோசடிகள், துரோகங்கள், கள்ளத் தொடர்புகள், ஆசை, காமம், மோகம், குற்ற உணர்ச்சி, முன்னேறி செல்ல அடுத்தவர்களை ஏறி மிதிக்க தயங்காத மனம் என அத்தனை உணர்ச்சிகளையும் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ள நடிகர்கள் இயக்குநர் கேட்டதை விட எக்ஸ்ட்ரா கொட்டி நடித்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவை மட்டுமே காதலிக்கும் ஸ்ரீகாந்த் ராயாக பிரொசன்த்ஜித் சட்டர்ஜி, அவரது மனைவி சுமித்ரா குமாரியாக அதிதி ராவ் ஹைதரி, ஜம்ஷத் கானாக நந்திஷ் சந்து, சாமானியனும் சூப்பர் ஸ்டாராக முடியும் என்பதை நிரூபித்து மதன் குமாராக மாறும் பினோத்தாக நடித்த ஹீரோ அபர்சக்தி குரானா, ஜெய் கன்னாவாக நடித்த சித்தாந்த் குப்தா, பாலியல் தொழிலாளியாக அறிமுகமாகி ஹீரோயின் நிலோஃபர் குரேஷியாக மாறும் வாமிகா கபி என முன்னணி நடிகர்கள் நடிப்பும் அவர்களுக்கு இணையாக நடித்துள்ள குணசித்ர நடிகர்களின் நடிப்பும் டாப் கிளாஸ்.
பாசிட்டிவ்: பரப்புரை படங்களை இந்தியாவில் ரஷ்யர்கள் திணிக்க முயற்சி செய்வது, இஸ்லாமிய நடிகருக்கு இந்து பெயர் வைத்து அதிக மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிப்பது, அகதியாக மாறினாலும் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்கிற வெறியில் எல்லா வேலைகளையும் செய்யும் ஜெய் கன்னா கதாபாத்திரம், சாதாரண மனிதன் ஸ்டார் ஆக முடியாதா என்கிற நம்பிக்கையுடன் மதன் குமாராக மாறும் பினோத். ஜம்ஷத் கானின் கொலைக்கு நாம் தான் காரணம் என கடைசி வரை குற்ற உணர்ச்சியுடன் நடித்திருப்பது, அதை வைத்தே ராஜ்மஹால் எனும் கதையை படமாக்குவது.
தயாரிப்பாளர்கள் நினைத்தால் கடைசி நேரத்தில் நல்ல படங்களையும் ஓடாத படமாக மாற்றி அமைக்க முடியும் என்கிற சினிமா அரசியல். நடிகைகள் வாய்ப்புகளை பெற இன்னொரு நடிகருடன் உறவு கொள்வது, நடிகர்களின் போன்களை ஒட்டுக்கேட்டு தங்களுக்கான வேலைகளை பார்க்கும் அரசியல்வாதியாக விஜய் ஆதிராஜ் நடித்துள்ள நடிப்பு படத்தின் ஆர்ட் வொர்க், காஸ்ட்யூம்ஸ் என அனைத்துமே மிரட்டுகிறது.
மைனஸ்: ஆனால், இந்த ஜூப்ளி வெப்சீரிஸில் குறைகளும் அதிகமாகவே உள்ளது தான் மிகப்பெரிய பிரச்சனை. ராஜ்மகால் படத்தின் கிளைமேக்ஸை ஸ்ரீகாந்த் ராய் மாற்றியதை போலவே இந்த ஜூப்ளி வெப்சீரிஸின் கிளைமேக்ஸையும் இஷ்டத்துக்கு அவசரகதியில் மாற்றி கெடுத்து விட்டனர் என்று தான் தோன்றுகிறது.
பாலிவுட்டுக்கு முந்தைய இந்தி சினிமாவையே காட்டப் போகின்றனர் என்கிற பிரம்மிப்புடன் தொடங்கும் கதை சில எபிசோடுகளுக்குப் பிறகு ஜம்ஷத் கான் மரணத்தையே சுற்றி சுழல்வது மிகப்பெரிய மைனஸ் என்று தான் சொல்ல வேண்டும். ஜம்ஷத் கானை மதன் குமார் கொல்லவில்லை என்கிற காட்சிகளை காட்டிய பின்னரும், அதை வைத்து கதையை நகர்த்தியது தான் பார்வையாளர்களை கடுப்பாக்குகிறது. நிலோஃபர் குரேஷியின் கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வெயிட்டேஜ் கடைசியில் அவரை அனாமத்தாக விட்டு விடும் காட்சிகளில் எல்லாம் வெப்சீரிஸுக்கு பெரும் பிரச்சனையாக மாறுகிறது.
ஸ்ரீகாந்த் ராய், சுமித்ரா குமாரியின் முடிவுகளும் தெளிவாக இல்லாமல் வெப்சீரிஸை முடிக்க வேண்டும் என்று முடித்ததை போலவே உள்ளது மைனஸ் தான். ஆனாலும், தாராளமாக இந்த வெப்சீரிஸை தொடர்ச்சியாக பார்க்க வைத்து விடும் மேஜிக்கை முதல் இரண்டு எபிசோடுகள் தாராளமாக செய்து விடுவது தான் பெரிய பிளஸ்.