2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி ஜூன் 15ம் தேதி வியாழக் கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நட்பு ரீதியிலான கால்பந்துப் போட்டியில் விளையாடவிருக்கிறது.
இப்போட்டி சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள மிகப்பெரிய கால்பந்து ஸ்டேடியமான ‘வொர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில்’ நடைபெறுகிறது. இதனால், 68,000பேர் வரை அமரும் வகையில் பிரமாண்டமாக அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தின் டிக்கெட் விலைகள் பல மடங்காக உயர்ந்துவருகிறது. இருப்பினும், அர்ஜென்டினா நாயகன் மெஸ்ஸி விளையாடுவதைக் காண ஏரளாமான ரசிகர்கள் போட்டிப்போட்டு மேட்சுக்கான டிக்கெட்டுகளை வாங்கிய வண்ணம் இருக்கின்றனர். மேலும், மெஸ்ஸியின் வருகையால் அந்நகரமே ரசிகர்களின் வெள்ளத்தில் விழாக் கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் ‘மெஸ்ஸி…மெஸ்ஸி’ என ஆரவாரமிட்டு உற்சாகத்துடன் மெஸ்ஸியை வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெய்ஜிங் நகரம் முழுவதும் மெஸ்ஸியின் டி-சர்ட், உணவகங்களில் மெஸ்ஸியின் பெயரில் ஆஃபர்கள் என மெஸ்ஸியின் பெயரை வைத்து பெரிய மார்க்கெட்டிங் விற்பனைகள் களைகட்டியுள்ளது. இதற்கிடையில் மெஸ்ஸியை நேரில் சந்திக்க வைப்பதாகப் பல பொய்யான விளம்பரங்கள் அந்நகரை ஆட்கொண்டுள்ளது. அவற்றில், மெஸ்ஸியுடன் சேர்ந்து உணவருந்த 42,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 34 லட்சம்) எனும் போலியான விளம்பரம் ஒன்று தீயாய் பரவி வருகிறது. மேலும், ’50 மில்லியன் யுவான் பணம் செலுத்தினால் மெஸ்ஸி உங்கள் கடைகளின் அல்லது பிராண்ட்களின் பொருட்களை பற்றி விளம்பரப்படுத்தி பேசுவார்’ என்றும் ‘மெஸ்ஸி சந்தித்து அவருடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பை பெற $1122(சுமார் ரூ.92000)’ என்றும் பல போலியான விளம்பரங்களும் செய்திகளும் சமூக வலைதளங்களிலும், பெய்ஜிங் நகரம் முழுவதும் பரவி வருகின்றன. இதனால் பெய்ஜிங் காவல் துறை இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாந்துவிடவேண்டாம் என்றும் இதை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.