புளோரிடா,: அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, தன் தனிப்பட்ட பங்களாவில், குளியலறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்ததாக, புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வழக்கில், நாளை மறுதினம் மியாமி கோர்ட்டில் ஆஜராக டிரம்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரும் பணக்கார தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சியின் சார்பில், 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்தார்; 2020 தேர்தலில் தோல்வியடைந்தார்.
அப்போது, தன் பதவி காலத்தின்போது கையாண்ட ரகசிய ஆவணங்களை அவர், தன் பங்களாவுக்கு எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.
புகார்
அமெரிக்க சட்டங்களின்படி, தன் பதவிக் காலத்தில் தான் பார்க்கும் மற்றும் வைத்திருக்கும் முக்கிய ரகசிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை, அதிபர் பதவியில் இருந்து வெளியேறுபவர், அந்நாட்டின் ஆவண காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், டொனால்டு டிரம்ப் இதை மீறி, முக்கிய ஆவணங்களை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில், கடந்தாண்டு சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.
இந்த விவகாரத்தில், டொனால்டு டிரம்ப் மீது, ஏழு பிரிவுகளில், 37 குற்றங்கள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், டொனால்டு டிரம்ப் குற்றம் செய்துள்ளார் என்பதற்கான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
அதிபர் பதவியின்போது தான் கையாண்ட பல முக்கிய ஆவணங்களை, புளோரிடாவில் உள்ள, ‘மாரா லாகோ’ என்ற தனக்கு சொந்தமான சமூக பொழுதுபோக்கு ‘கிளப்’புக்கு, டொனால்டு டிரம்ப் எடுத்துச் சென்றுள்ளார்.
இது, வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என, பல தரப்பினர் அளித்த வாக்குமூலங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, அதிபர் பதவிக்கான வேட்பாளராக இருந்தபோதும், அதிபராக இருந்தபோதும், டொனால்டு டிரம்ப் பேசிய பேச்சுகளில், இது குறித்து குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2020ல் அவர் அதிபர் பதவியில் விலகியதில் இருந்து, 2022ல் அவை கைப்பற்றப்பட்ட வரை, அந்த கிளப்புக்கு ஆயிரக்கணக்கானோர் சென்றுள்ளனர்.
அவர்களில் சிலரிடம், டொனால்டு டிரம்ப் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை காட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான, ‘பென்டகன்’ நடத்த திட்டமிட்டிருந்த, சில தாக்குதல் உள்ளிட்ட ஆவணங்களும் அடங்கும்.
மிகப் பெரும் குற்றம்
இந்த ஆவணங்கள், அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்புடையவை. மேலும், வெளிநாடுகளுடனான துாதரக உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த ஆவணங்களை, டிரம்ப் ரகசியமாக பதுக்கி வைத்திருந்ததுடன், சிலருக்கு காண்பித்ததும் மிகப் பெரும் குற்றமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புளோரிடாவில் உள்ள டிரம்பின் தனிப்பட்ட பங்களாவில், 80 பெட்டிகளில் இந்த ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
அந்த கிளப்பின் ஒரு பகுதியில் இருந்த டிரம்ப் பங்களாவின் சமையலறை, குளியலறை உட்பட பல இடங்களில், இந்த பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. பின், இந்த ஆவணங்கள், தரைதளத்தில் உள்ள ரகசிய அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முதல் முறையாக மியாமி நீதிமன்றத்தில், நாளை மறுதினம் ஆஜராக டொனால்டு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாலியல் புகார் கூறிய நடிகைக்கு பணம் கொடுக்க முயன்றது தொடர்பாக, நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகி, அது உறுதி செய்யப்பட்டன.
இதைத் தவிர, வாஷிங்டன், அட்லாண்டா நீதிமன்றங்களிலும் டிரம்ப் மீது சில வழக்குகள் உள்ளன. அவற்றிலும், அவர் மீது குற்றச்சாட்டு பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற வழக்குகளை விட, மியாமி நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அடுத்தாண்டு டிசம்பரில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிட, டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைகள், அவருடைய முயற்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட, பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் மீதான வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு, அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்