சென்னை”தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை, இரண்டு முறை தி.மு.க., தான் கெடுத்தது. எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்; ஏழை குடும்பத்தில் இருந்து ஒருவரை, பிரதமராக அரியணை ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும். பா.ஜ.,வால் மட்டுமே அது சாத்தியம்,” என, சென்னையில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சூளுரைத்தார். ‘தமிழகத்தில், 25 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் செயலாற்றுங்கள்’ எனவும், கட்சி நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசினார்.
இரண்டு நாள் பயணமாக, தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, சென்னை கோவிலம்பாக்கத்தில் நேற்று நடந்த தென்சென்னை லோக்சபா தொகுதி, பா.ஜ., நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த, ஒன்பது ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை, மத்திய பா.ஜ., ஆட்சி நிறைவேற்றி உள்ளது. இந்த சாதனைகளை, தமிழக மக்களிடம் நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும்.
சென்னை விமான நிலையத்தை விட்டு, நான் வெளியே வந்ததும் மின்சாரம் தடைபட்டது. நான் கிளை தலைவராக கட்சியில் பணியாற்றி, உள்துறை அமைச்சராக இருக்கிறேன்.
என் அரசியல் வாழ்க்கையில், இருளை கண்டு நான் பயந்ததில்லை; பழகிவிட்டேன். தமிழகம் இருண்ட நிலையில் இருக்கிறது; விரைவில், நாம் ஒளியேற்றுவோம்.
வரும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்; மீண்டும், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமையும்.
தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 25 எம்.பி.,க்களை அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் அதிகமான தாமரைகள்மலர்ந்து, ஆட்சியை பிடிக்க வேண்டும்.
பிரதமராக தமிழர்
தமிழகத்தைச் சேர்ந்த, காமராஜர், ஜி.கே.மூப்பனார் இருவரும், பிரதமராகும் வாய்ப்பு உருவானது. அதைக் கெடுத்தது, தி.மு.க., தான். அதற்கு அடுத்ததாக யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
வரும் காலங்களில், தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும். ஏழை குடும்பத்தில் இருந்து ஒருவரை, பிரதமராக அரியணை ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தை, நாம் வளர்க்க வேண்டும்; பா.ஜ.,வால் மட்டுமே அது சாத்தியம்.
தமிழ் மொழியை காப்பாற்றவும், அம்மொழியை போற்றவும், தேசிய அளவில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அனைத்து இடங்களிலும், தமிழை கொண்டு செல்வதில் தனிக் கவனம் செலுத்துகிறது.
தமிழுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்ற மாயையை, இங்குள்ள தி.மு.க., திட்டமிட்டு கட்டமைத்துள்ளது.ஆனால், பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழ் வளர்ச்சிக்கு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமை பணிகள் தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுத முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.
‘நீட்’ தேர்வை தமிழில் எழுதும் நிலையை பா.ஜ., அரசு அமல்படுத்தியது. இவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக்கு, நாம் செய்த திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடந்த 50 ஆண்டுகளில், திராவிட கட்சிகள் தமிழை சிதைத்து வருகின்றன. இதை, இங்குள்ள பா.ஜ., நிர்வாகிகள் ஒவ்வொரு வீடு தோறும் எடுத்துச் சென்று பேச வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தென்சென்னை லோக்சபா தொகுதியில், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி, 55 சதவீதம் முடிந்துஉள்ளது; மீதமுள்ள பணியை ஜூலை 30க்குள் முடிக்க வேண்டும்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு
பா.ஜ.,வுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில், 60 சதவீதத்தை செப்., 30க்குள் முடித்தாக வேண்டும். அந்த கமிட்டிகள் வலிமை உடையதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஊழல் நிறைந்த, தி.மு.க., குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தொடர்ச்சி 5ம் பக்கம்
தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், துணை தலைவர்கள் கரு.நாகராஜன், மாநில செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்