WTC Final 2023: அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி – முன்னாள் பயிற்சியாளரின் கணிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5வது நாளில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி நாளில் 288 ரன்கள் எடுத்தாக வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகளை இந்திய அணி வைத்திருக்கிறது. தற்போது களத்தில் விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நேரங்கள் நிலைத்து நின்று விளையாடும்பட்சத்தில் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இருவரும் விரைவாக அவுட்டானால் தோல்வியை தவிர்க்க முடியாது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, கடைசி நாளில் அற்புதங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

WTC கோப்பை இந்தியாவுக்கு இல்லை 

ரவி சாஸ்திரி பேசும்போது, ” ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது நாளில் அவுட் ஆனதற்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், பேட்ஸ்மேன் சேட்டேஷ்வர் புஜாராவும் தங்களைத் தாங்களே கடுமையாக திட்டிக் கொள்ள வேண்டும். 444 ரன்களை வெற்றிபெற துரத்தும்போது, டாப் ஆர்டரில் கேப்டன் பெரிய ஸ்கோரை எடுத்திருந்தால், இந்தியாவின் வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்திருக்கும். அவர் நான்காவது இன்னிங்ஸில் வேகமாக ரன் குவித்துக் கொண்டிருந்தார். ஆஃப்-ஸ்பின்னர் நாதன் லயன் பந்துகளை எதிர்கொள்ளும்போதும் அடித்து ஆடும் எண்ணத்திலேயே இருந்தார். இதனால் எல்பிடபள்யூ ஆனார்.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

அதேநேரத்தில் ஆடுகளம் நடந்துகொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரோஹித் சர்மாவும், சேதேஷ்வர் புஜாராவும் தாங்கள் விளையாடிய ஷாட்களை விளையாடியதற்காக தங்களைத் தாங்களே திட்டிக் கொள்ள வேண்டும். நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ​​மோசமான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை ஏன் இழக்க வேண்டும்?. இருப்பினும் இந்தியா இன்னும் ஆட்டத்தில் இருக்கிறது. டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் 280 ரன்களைத் துரத்தும் திறன் இந்திய அணியிடம் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.

முதல் ஒரு மணிநேரம் முக்கியம்

5வது நாளில் முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது. அப்போது விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது களத்தில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரஹானே நீண்ட நேரம் களத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் ரன் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நம்புகிறேன். அவர்கள் விளையாடுவதை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும். அத்தகைய அற்புதம் நிகழ்ந்தால் இந்தியாவின் வெற்றியை தடுக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.