உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. அந்த அணி நிர்ணயித்த மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2வது முறையாக தகுதி பெற்ற இந்திய அணி, இந்த முறையும் தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதுவே இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 469 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிரடியாக ஆடிய டிராவிஸ்ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸிலேயே அதிக ரன்கள் லீட் எடுத்த ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்து டிக்ளோர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 444 ரன்கள் என்ற மெகா இலக்கு வெற்றிக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி மீண்டும் தோல்வி
(@CricCrazyJohns) June 11, 2023
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸிலும் தடுமாறியது. சுப்மான் கில் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாராவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார் ரோகித் சர்மா. இவரும் ஆடிய விதத்தை பார்க்கும்போது நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்த நிலையில், தவறான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அவர்கள் அவுட்டான பிறகு விராட் கோலியும் ரஹானேவும் ஓரளவுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
(@CricCrazyJohns) June 11, 2023
ஆனாலும், அவர்களை நிலைத்து நின்று விளையாட அனுமதிக்கவில்லை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். 5வது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் அரைசதத்தை நோக்கி முன்னேறிய விராட் கோலி, போலண்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் அவுட்டானாதும் இந்திய அணியின் அச்சாரம் உடைந்து விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. முடிவில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற கவுரத்தை பெற்றது ஆஸ்திரேலியா. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.