தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் புயலாக மாறியது. பிபர்ஜாய் என பெயரிடப்பட்ட இந்த புயல் தொடர்ந்து தீவிரம் அடைந்து வந்த நிலையில் தற்போது அதிதீவிர புயலாக கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. பிபர்ஜாய் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடலில் அதி தீவிர புயலாக தீவிரமடைந்துள்ள பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புயல் நிலவரம் மற்றும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மக்களின் குரல் கேட்குதா? தமிழக அரசை சரமாரியாக விளாசிய அன்புமணி ராமதாஸ்!
பிபர்ஜாய் புயல் நாளை மறுநாள் அதாவது வரும் 15ஆம் தேதி கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
புயல் காரணமாக குஜராத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவபூமி துவாரகா, ஜாம்நகர் மற்றும் ஜுனாகத் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜூன் 13 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாடியோ… ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய சமந்தா… எத்தனை கோடி பாருங்க!
கனமழை பெய்து வருவதால் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மும்பையிலும் கன மழை பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அலையும் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.