பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது ஊழல் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அண்ணாமலை, `தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.’ என்று குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பதாக அ.தி.மு.க தரப்பிலிருந்து அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தன்னை முன்னிலைப்படுத்தும் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு வரலாறு, பாரம்பர்யம் என எதுவும் தெரியாது. ஜெயலலிதா குறித்த விமர்சனம் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது. கூட்டணி தர்மத்தை மீறியிருக்கிறார். அமித் ஷாவும், நட்டாவும் உரியவகையில் அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும். மாநில தலைமைக்குத் தகுதி இல்லாதவர். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரக் கூடாது என்பதாகத்தான் அவரின் பயணம் இருக்கிறது. அண்ணாமலையின் இந்தப் போக்கு தொடர்ந்தால், கூட்டணி குறித்து அ.தி.மு.க உரிய நேரத்தில் முடிவுசெய்யும்” எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஜெயக்குமாரின் பேச்சுக்கு பா.ஜ.க முகாமிலிருந்து அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் எதிர்வினையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ஜ.க பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, “முதலவர் ஸ்டாலின் எதையும் படிப்பதில்லை. அரைகுறையாக பிறர் சொல்வதைக் கேட்டு அதை நம்புகிறார். அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் பேசியதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அவர் நேரடியாக அண்ணாமலையைப் பார்த்து கேள்வி கேட்கிறார். ஜெயக்குமாரின் கேள்விக்கு அண்ணாமலைதான் பதில் சொல்ல முடியும். அ.தி.மு.க உடனான பா.ஜ.க கூட்டணி தொடரும் என அமித் ஷா சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு மோதல் போக்கெல்லாம் ஒன்றுமில்லை. ஜெயலலிதா ஊழல்வாதி என்ற அண்ணாமலை எப்போதும், அரசியல் தெரிந்து உண்மையைத்தான் பேசுவார். சட்டம் தெரிந்தவர். மாநிலத் தலைவராக இருப்பதால் அவருக்கு எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் எனத் தெரியும். நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சிறைக்குச் சென்றார். எவ்வளவு குற்றச்சாட்டுகள் வந்தது என்று நமக்கு தெரியும். அவர் சிறைக்குச் சென்ற பின்பு இ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தார். அவருடனான எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கிறது.
அதில் மாற்றமில்லை. கூட்டணி என்று இருந்தால் சில வார்த்தைகள் வரத்தான் செய்யும். ஜெயலலிதா ஊழல்வாதி என்றால் ஊழல் கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்… கூட்டணி எங்களுக்கு இருக்கிறது, ஏன் வைக்கிறீர்கள் என்பதற்கு பதில் கிடையாது.
அண்ணாமலை எந்த ரீதியில் அவ்வாறு சொன்னார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நான் இல்லை. அண்ணாமலையின் பேச்சுக்கு அவர்கள் பதில் கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் தேசிய தலைவர்களை ஏன் யாரும் உருவாக்கவில்லை என்ற வருத்தத்தைத்தான் `தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும்’ என அமித் ஷா பேசியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.